×

வேதாரண்யத்தில் வறட்சியால் பாதித்த முல்லைப்பூ சாகுபடி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் கருப்பம்புலம் ஆயக்காரன்புலம் மருதூர் உள்ளிட்ட 20 கிராமங்களில் சுமார் ஆறாயிரம் ஏக்கரில் முல்லை பூ சாகுபடி நடைபெறுகிறது. புகையிலை சாகுபடிக்கு மாற்றாக சுமார் 80 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த முல்லை பூ சாகுபடி இந்த ஆண்டு கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாகுபடியை நம்பியுள்ள சுமார் பத்தாயிரம் குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் மார்ச் மாதம் துவங்கி அக்டோபர் வரை இந்த முல்லை பூ சீசன் காலமாகும். இந்த சீசன் காலத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 20 டன் முல்லை பூ பட்டுக்கோட்டை திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கிலோ ரூ.250 முதல் 400 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சீசன் இல்லாத நவம்பர் முதல் பிப்ரவரி வரை கிலோ ரூ.1000 வரை விற்பனை ஆகிறது. பல மாதங்கள் குறைந்த விலைக்கு விற்பனையாகும் இந்த பூ ஆயுதபூஜை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மட்டுமே கிலோ ரூ.1000 முதல் 1500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. பல நேரங்களில் பூ எடுக்கும் கூலிக்கூட விலையில்லாததால் விவசாயிகள் பலநாட்கள் பூவை எடுக்காமலே விட்டுவிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் முல்லைபூ சாகுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால் கிணறுகளிலிருந்து பூச்செடிகளுக்கு தண்ணீர் இறைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் முல்லை பூச்செடிகள் கருக துவங்கியுள்ளன. இதனால் இப்பகுதியில் முல்லை பூ விவசாயம் கேள்விகுறியாகி உள்ளது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட முல்லை பூ விவசாயிகளுக்கு  ஏக்கருக்கு ரூபாய் 1 லட்சம் நீண்டகால கடனாக வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mullaperiyar ,drought ,Vedaranyam , Vedaranyam, drought, mullaippu
× RELATED தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக...