சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்

சென்னை: நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஊழல்வாதிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில், கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய சரவணன் என்பவர் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து,  அவரை பணியிடை நீக்கம் செய்து ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் 2016ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சஸ்பெண்டை மறு ஆய்வு செய்யும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி  சரவணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது: கருவறை முதல் கல்லறை வரை இந்திய மக்கள் லஞ்சத்தை எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு பெண் பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு சென்றால் அங்கு மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம் தர வேண்டியுள்ளது. சில நேரங்களில் டாக்டர்களுக்கும் லஞ்சம் தர வேண்டியுள்ளது. ஆண் குழந்தை, பெண் குழந்தைக்கு என்று தனித்தனி லஞ்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நியாயமான அதிகாரியாக இருந்தால் உங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாது. மருத்துவம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதற்கு கூட லஞ்சம் தரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தை வளர்ந்தவுடன் பள்ளியில் சேர்க்க லஞ்சம். அதன்பிறகு கல்லூரி, தொழிற்கல்வி படிப்புக்கு லஞ்சம்.

தேர்வு எழுதினால் விடைத்தாள் திருத்தத்தில் அதிக மதிப்பெண்தர லஞ்சம். கல்வி நிறுவனங்களிலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்திற்கு பதிலாக இச்சைக்கு இணங்க செய்யும் துரதிருஷ்டவசமான நிலையும்  உள்ளது. லஞ்சம் என்பது சமுதாயத்தில்  சாதாரண விஷயமாகிவிட்டது. வேலைவாய்ப்புக்காக சொத்துகளை விற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேகமாக முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் இளைஞர்களையும் லஞ்சம் தொற்றிக்கொள்கிறது. சமீபத்தில் வாக்குக்கு லஞ்சம் கொடுப்பது குறித்து  பரவலாக பேசப்படுகிறது. சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சட்டங்களை இயற்றுவதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காணச் செய்து விடும். வாக்கின் புனிதத்தை சில வாக்காளர்கள் உணர்வதில்லை. ஊழலுக்கு எதிராக போராடும்  பாண்டவர்களை, ஊழல்வாதிகளான கவுரவர்களிடம் இருந்து நீதிமன்றங்கள் தான் பாதுகாக்க வேண்டும். ஆனால், ஊழலுக்கு நீதித்துறையும்  விதிவிலக்கு அல்ல. ஊழலை வேறோடு அழிக்க லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும். ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஊழல் செய்பவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மட்டும் தண்டனையாகாது. அவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஊழல் செய்யும் நீதித்துறை அதிகாரிகளையும், அரசு அதிகாரிகளையும் தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும்.  இவர்களால் நாட்டின் வளர்ச்சி தடைபடுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார். கருவறை முதல் கல்லறைவரை மக்கள் லஞ்சத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது- நீதிபதி



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras High Court , Madras High Court, corrupters, national antagonists
× RELATED சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்