×

விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை மருத்துவமனையில் சேர்த்த ராகுல் : சமூக வலைதளங்களில் வைரலாகிறது

விபத்தில் சிக்கிய பத்திரிகையாளரை தனது காரில் ஏற்றிச்சென்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்த ராகுல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரது  பாராட்டை பெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் வெளிவரும் தினசரி பத்திரிகையொன்றின் உரிமையாளர் ராஜேந்திர வியாஸ். இவர், நேற்று முன்தினம் மத்திய டெல்லியின் ஹூமாயூன்  சாலையில் செல்லும்போது விபத்தில் சிக்கினார். அப்போது, அந்த வழியே ராகுல் காந்தி தனது காரில் சென்று கொண்டிருந்தார். ராஜேந்திர வியாஸ் சாலை விபத்தில்  சிக்கியதை கண்ட ராகுல், தனது காரை நிறுத்தி அந்த பத்திரிகையாளரை தனது காரில் ஏற்றிக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தார். காரில் மருத்துவமனைக்கு செல்லும் வழியில், அடிப்பட்ட பத்திரிகையாளர் ராஜேந்திர வியாசுக்கு நெற்றியில் ரத்தம் வழிந்தது. இதை பார்த்த ராகுல், தனது கைக்குட்டையை  கொண்டு  துடைத்துவிட்டவாறு சென்றார். அப்போது முன்புறம் இருந்த அவரது உதவியாளர் செல்போனில் அதை படம் பிடித்தார்.

பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் ராகுலை பார்த்து, “சார், உங்களது கைக்குட்டையை எடுத்து மீண்டும் எனது நெற்றியில் ஒற்றியெடுங்கள். இதனை எனது பணிக்காக  பயன்படுத்திக் கொள்கிறேன்” என கேட்கிறார்.  இதனைக் கேட்டு ராகுல் சிரித்துவிட்டு பின்னர் தனது கர்சீப்பை எடுத்து பத்திரிகையாளரின் நெற்றியில் ஒத்தியெடுத்தார்.  அதன்பின் அவரை எய்ம்ஸ்சில் சேர்த்துவிட்டு ராகுல், தல்கோத்ரா மைதானத்தில் நடைபெற்ற பொதுகூட்ட நிகழ்ச்சிக்கு சென்றார். பத்திரிகையாளருக்கு ராகுல் உதவி செய்யும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை பார்த்த டெல்லி மாநில காங்கிரசின் முன்னாள் தலைவர் அஜய்  மாகென், டிவிட்டரில் ராகுலை புகழந்து அவரது மனிதாபிமானம் பற்றி கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ராகுல் காந்தியை விட சிறந்த மனிதாபிமான குணங்களைக்  கொண்ட ஒரு நபரை இன்னமும் நான் பார்க்கவில்லை. ராகுலின் மனிதாபிமானம் பற்றி  நூற்றுக்கணக்கான சம்பவங்களை நாம் விவரிக்க முடியும். ஆனால்  அவற்றை  தெரிவித்து விளம்பரப்படுத்த ராகுல் விரும்புவதில்லை. இது அவரது  மனிதாபிமானத்தின் இன்னொரு பரிமாணத்தை அதிகரித்து  காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.

புகைப்படக்கலைஞருக்கு உதவி
கடந்த ஆண்டு ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்திற்கு சென்றபோது புவனேஷ்வர் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது புகைப்படக்காரர்கள் ராகுலை  சூழ்ந்துகொண்டு வீடியோ எடுத்தனர். அப்போது,  ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கவனித்த ராகுல் கீழே இறங்கி அவருக்கு கைகொடுத்து உதவினார். அந்த  வீடியோவும் வைரலானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,hospital ,accident , journalist , accident, Rahul
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...