×

மேட்டூர் அருகே கெரசின் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து : பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

மேட்டூர்: மேட்டூர் அருகே ஒயிட் கெரசின் ஏற்றி வந்த லாரி, பெட்ரோல் பங்க் அருகே  சாலையில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்ததால் பெரும் அசம்பாவிதம்  தவிர்க்கப்பட்டது. சென்னையில் இருந்து கேரள மாநிலத்தில் உள்ள  தனியார் தொழிற்சாலைக்கு, பெட்ரோல் மற்றும் பெயிண்ட் கலக்க கூடிய ஒயிட்  கெரசினை ஏற்றி கொண்டு டேங்கர் லாரி புறப்பட்டது. நேற்று காலை சுமார் 7  மணியளவில், மேச்சேரிமேட்டூருக்கு இடையே உள்ள குள்ளமுடையனூர்  என்ற இடத்தில் டேங்கர் லாரி வந்த போது, திடீரென நிலை தடுமாறி சாலையில்  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது லாரியில் இருந்து ஏராளமான ஒயிட் கெரசின் சாலையில் வழிந்தோடியது.

இதனை  பார்த்த அங்கிருந்தவர்கள், உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு  துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், மேட்டூர் அனல்  மின்நிலையம் மற்றும் தனியார் நிறுவனத்தின் தீயணைப்பு வாகனங்கள்  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர், தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து  ஏற்படாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால்,  அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மாற்று வழியாக  வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதையடுத்து 4 கிரேன்கள்  மூலம் லாரி  மீட்கப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘விபத்து  நடந்த இடத்தின் அருகிலேயே பெட்ரோல் பங்க் உள்ளது. தீயணைப்பு துறை  வீரர்கள் விரைந்து வந்து நடவடிக்கை எடுத்ததால், பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டது,’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lorry road ,accident ,Mettur ,disaster ,Mass , Mettur, truck, accident
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!