×

குரங்குகளை விரட்ட கடைகளில் நீலம் கலந்த தண்ணீர் பாட்டில் : வியாபாரிகள் புது டெக்னிக்

மஞ்சூர்: மஞ்சூர் பகுதியில் குரங்குளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் அதனை விரட்ட கடைகளில் முன் நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை வியாபாரிகள் தொங்கவிட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் மளிகை கடைகள், பழக்கடைகள், பேக்கரி, ஹோட்டல் என ஏராளமான கடைகள், வனிக நிறுவனங்கள் உள்ளது. இந்நிலையில் பஜார் பகுதியில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் முகாமிட்டு அட்டகாசம் செய்து வந்தது. குறிப்பாக கடைகளின் முன் வைக்கப்பட்டிருக்கும் பழங்கள், இனிப்பு பண்டங்கள், பொறி, கடலை பாக்கெட்டுகள் உள்ளிட்ட திண்பண்டங்களை குரங்குகள் துாக்கி செல்வதும், பொருட்களை கீழே தள்ளி விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டது. இதனால் வியாபாரிகள் பாதிப்பிற்குள்ளாகினர்.

அதேபோல், கடைகளில் பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் பொதுமக்களின் கைகளில் இருந்தும் குரங்குகள் பொருட்களை பறித்து செல்கிறது. மேலும் பொருட்களை துாக்கி செல்லும் குரங்குகளை விரட்ட முற்பட்டால் அவைகள் ஆக்ரோஷத்துடன் கடிக்க பாய்கிறது, குரங்குகளின் அட்டகாசத்தால் தினசரி தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் அதிருப்தி தெரிவித்தனர். குரங்குகளிடம் இருந்து பொருட்களை பாதுகாக்க வியாபாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். குறிப்பாக கடைகளின் முன்பாக தொங்கவிடப்படும் வாழை தார்களை நைலான் வலை மற்றும் துணிகளை கொண்டு மூடி வைப்பது, குரங்குகள் நுழையாதவாறு கம்பி சல்லடைகளை கொண்டு தடுப்புகளை அமைப்பது போன்ற செல்களில் ஈடுபட்டனர். இருப்பினும் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது.

இந்நிலையில் குரங்குகளை விரட்ட தற்போது புது முயற்சியை வியாபாரிகள் பயன்படுத்தியுள்ளனர்.  காலி பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி அதில் சொட்டு நீலம் கலந்து, கடைகளின் முன்பாக கட்டி தொங்க விடுகின்றனர். நீலம் கலந்த தண்ணீர் பாட்டிகளை கண்டால் குரங்குகள் அதன் அருகில் வருவதில்லை என வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் குரங்குகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் பலரும் தங்களது கடைகளின் முன்பாக நீலம் கலந்த தண்ணீர் பாட்டில்களை தொங்கவிட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : merchants , Monkeys, water, merchants
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...