×

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரிய கிறிஸ்துவ மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றக் கோரி கிறிஸ்துவ அமைப்பு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மத்தியில் பாஜ தலைமையிலான தேசிய  ஜனநாயக கூட்டணி அரசின் 16வது மக்களவை பதவிக் காலம் வரும் ஜூன் 3ம் தேதியுடன் முடிகிறது. இதையொட்டி, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தலை நடத்த தேர்தல்  ஆணையம் முடிவு செய்தது. ஆந்திரா உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால் அந்த மாநிலங்களில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை  தேர்தலையும் நடத்துவதற்கான ஆலோசனைகள் செய்யப்பட்டன. அதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து தேர்தல்  நடத்த வேண்டுமென அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதைத் தொடர்ந்து, தேர்தல் திருவிழாவை நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் முடிந்த நிலையில், தலைமை தேர்தல்  ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் கடந்த 10-ம் தேதி நடந்தது.

இக்கூட்டம் முடிந்ததும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லி விஞ்ஞான் பவனில், 17வது மக்களவை தேர்தலுக்கான தேதியை அறிவித்தார். அதன்படி, நாடு முழுவதும்  உள்ள 543 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி மே 19ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு  வரும் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. அன்றைய தினமே, காலியாக உள்ள 18 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான  வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய  தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், ஏப்ரல் 18-ம் தேதி புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுவதால் தேர்தல் தேதியை மாற்றக்கோரி கிறிஸ்துவ மக்கள் களம் அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தது. இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், பெரிய வியாழன் பண்டிகையை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madras High Court ,Christian ,election ,Tamil Nadu ,Lok Sabha , Tamil Nadu, Lok Sabha election, Christian petition, dismissal, Chennai High Court
× RELATED தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி...