×

ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்து வந்த தண்ணீர் கேன் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை: 6 பேர் கும்பலுக்கு வலை

அண்ணாநகர்: ரவுடியாக இருந்து திருந்தி வாழ்ந்து வந்த தண்ணீர் கேன் வியாபாரி அரும்பாக்கத்தில் உள்ள கோயில் வாசலில் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். அரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி (46). ரவுடி தொழிலை கைவிட்டு அதே பகுதியில் தண்ணி கேன் சப்ளை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று காலை 10:45 மணியளவில் கிச்சா வழக்கம்போல தண்ணீர் கேன்களை லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அரும்பாக்கம் பெருமாள் கோயில் அருகே வந்தபோது பைக்கில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளோடு   கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்தது.
இதை பார்த்ததும்   கிருஷ்ணமூர்த்தி சுதாரித்துக்கொண்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றார். அதற்குள் அவர்கள் கிருஷ்ணசாமியை விடாமல் துரத்தி சென்று பெருமாள் கோயில் வாசலில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், தலையில் பலத்த வெட்டு காயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடித்து இறந்தார்.

தகவலறிந்து அரும்பாக்கம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி கடந்த காலங்களில் ரவுடியாக வலம் வந்துள்ளார். இவர் மீது கடந்த 2003, 2004ல்  சென்னை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி உட்பட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது, ரவுடி தொழிலை விட்டுவிட்டு தண்ணீர் கேன் தொழில் செய்து வந்துள்ளார். எனவே ரவுடி கிச்சாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை பழிக்குப்பழியாக கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் தனிப்படை அமைத்து விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : water can, rowdy,
× RELATED கோயில் அருகே தனியாக தூங்கி...