×

போருக்குப் பிறகு மாயமான திப்பு சுல்தான் துப்பாக்கி ரூ.54 லட்சத்துக்கு ஏலம்

லண்டன்: லண்டனில் உள்ள ஏல நிறுவனம் ஒன்றில் திப்பு சுல்தானின் போர் தளவாட பொருட்கள் ரூ.97.32 லட்சத்துக்கு விற்கப்பட்டது. கடந்த 1782ம் ஆண்டில் இருந்து 1799ம் ஆண்டு வரை மைசூரை  ஆண்டவர் திப்பு சுல்தான். இவர் மைசூரின் புலி என்று அழைக்கப்பட்டவர். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக போராடியவர். 1799ம் ஆண்டு ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரின்போது ஆங்கிலேயரிடம் தோல்வியடைந்து போரில் உயிரிழந்தார்.  ஆங்கிலேய அதிகாரியான மேஜர் தாமஸ் ஹார்ட் என்பவர்  திப்பு சுல்தானின் மைசூர் அரண்மனையில் இருந்த போர் தளவாடப் பொருட்கள், திப்பு பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட 8 கலைப்பொருட்களை எடுத்து சென்றதாக வரலாறு கூறுகிறது. போரில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக இவை எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்தின் பெர்க்ஷைரை சேர்ந்த தம்பதியர் கடந்த ஜனவரியில் தங்களது பழமையான வீட்டினை சுத்தம் செய்தனர். அப்போது வீட்டில் மேல் அலமாரியை சுத்தம் செய்தபோது திப்பு சுல்தான் பயன்படுத்திய போர் கருவிகள் இருந்தது தெரியவந்தது. தங்க கவசத்தால் ஆன வாள், துப்பாக்கி, போர் வாள்கள் உள்ளிட்ட 8 அரிய கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவை சுமார் 220 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. திப்பு சுல்தானின் போர் கருவிகளை தங்கள் வீட்டில் இருந்து எடுத்த தம்பதியினர் இதனை இங்கிலாந்தில் கலைப்பொருட்களை ஏலம் விடும் பிரபல ஏல நிறுவனமான ஆன்டனி கிரிப் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் வழங்கினார்கள். இதனை தொடர்ந்து இந்த அரிய கலைப்பொருட்கள் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டன. வெள்ளி தகடு பதிக்கப்பட்ட துப்பாக்கி 14 முறை விலை கேட்கப்பட்டு இறுதியாக ரூ.54 லட்சத்து 57ஆயிரத்துக்கு ஏலம் போனது.

அடுத்தது தங்கப்பிடியால் ஆன வாள். இது திப்பு சுல்தானின் பிரத்யேக வாள் என கருதப்படுகிறது. 58 முறை ஏலம் கேட்கப்பட்ட இந்த வாள் கடைசியில் ₹16 லட்சத்து 80ஆயிரத்துக்கு விற்பனையானது. வெற்றிலைப் பெட்டி ரூ.15 லட்சத்து 91ஆயிரம், கிழக்கிந்திய கம்பெனியின் முத்திரையிடப்பட்ட வெள்ளி மோதிரம் ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்துக்கு ஏலம் போனது. திப்பு சுல்தானின் பொருட்கள் மொத்தம் ரூ.97 லட்சத்து 32 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஏலத்துக்கு வந்த பொருட்களில் உள்ள ஒரு வாளில் தங்கத்தால் ஆன  ஹைதர் அலியின் சின்னம் இடம்பெற்றுள்ளது. எனவே, இது திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலிக்கு சொந்தமானதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : war ,Tipu Sultan , war, Tipu Sultan, Gun, auction
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...