×

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர் மனு ஏற்பை எதிர்த்து அதிமுகவினர் ரகளை

சென்னை: பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீது வியாசர்பாடி, சர்மா நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தேர்தல் அதிகாரி கருணாகரன், மற்றும் தேர்தல் மேலிட பார்வையாளர் ராஜிப் குன்ஹானி  முன்னிலையில் பரிசீலனை நடந்தது. இதில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர், அதிமுக ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. பரிசீலனையின்போது மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் திவ்யதர்ஷினியின் வேட்புமனு சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என அதிமுக வழக்கறிஞர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மனுவில் உள்ள குறைகள் குறித்து அதிகாரிகள் பரிசீலித்து, அந்த மனுவை சிறிது நேரத்துக்கு பின் ஏற்றுக்கொண்டனர். இந்த எதிர்ப்பினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர், எங்களது வேட்பாளர் மனுவில் குறை இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிப்போம் என்றனர்.
இதேபோல் அமமுக வேட்பாளர் வெற்றிவேலின் வேட்புமனு பரிசீலனையின்போது, அதிமுக முன்னாள் கவுன்சிலர் ேடவிட் ஞானசேகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  மனுவில் அவர் மீதுள்ள வழக்குகள் குறித்து எதுவும் குறிப்பிடாததால்  மனுவை நிராகரிக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. அப்போது அவருடைய மனுவை பரிசீலனை செய்த அதிகாரிகள்  மனு ஏற்கப்பட்டது என்று கூறியவுடன் அமமுகவினர் ஆரவாரம் செய்தனர்.

இதை பார்த்த அதிமுகவினர் தண்ணீர் பாட்டிலை வீசி வெற்றிவேலின் மனுவை நிராகரிக்க  கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது. புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் உள்ளே சென்று ரகளையில் ஈடுபட்டவர்களை வெளியே அனுப்பினர். போலீசாருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த அனைவரையும் வெளியேற்றி  பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ammukh ,candidate ,Perambur Assembly Election , Perambur Assembly Election Examination, Ammukh candidate candidate, AIADMK
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்