×

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கனடாவுக்கு எதிராக இந்தியா கோல் மழை: மன்தீப்சிங் ஹாட்ரிக்

ஈபோ: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில், இந்தியா 7-3 என்ற கோல் கணக்கில் கனடா அணியை வீழ்த்தியது. மலேசியாவின் ஈபோ நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வென்றது. அடுத்து தென் கொரியாவுடன் நடந்த 2வது லீக் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிரா ஆனது. கடைசி நிமிடத்தில் கோல் விட்டுக் கொடுத்ததால் இந்திய அணி வெற்றியை நூலிழையில் நழுவவிட்டது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது லீக் ஆட்டத்தில் மலேசிய அணியுடன் மோதிய இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இந்த நிலையில், 4வது லீக் ஆட்டத்தில் கனடா அணியுடன் நேற்று மோதிய இந்திய அணி கோல் மழை பொழிந்தது. 12வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி வருண் குமார் மின்னல் வேகத்தில் கோல் அடிக்க, இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து சக வீரர்களின் ஒத்துழைப்புடன் பந்தை அபாரமாக கடத்திச் சென்ற மன் தொடர்ச்சியாக 3 பீல்டு கோல் போட்டு (20வது, 27வது, 29வது நிமிடம்) அசத்தினார். இதனால் இந்தியா 4-0 என முன்னிலையை அதிகரித்தது. கனடா வீரர் மார்க் பியர்சன் 35வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பில் கோல் போட்டார். இதையடுத்து பதில் தாக்குதலை தீவிரப்படுத்திய இந்திய அணிக்கு 39வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அமித் ரோகிதாஸ் அற்புதமாக கோல் அடித்தார். இறுதிக் கட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் போட்டதால் ஆட்டம் விறுவிறுப்பானது. கனடா சார்பில் பின் போத்ராய்டு (50வது நிமிடம்), ஜேம்ஸ் வாலஸ் (57’) கோல் அடித்தனர்.

இந்திய வீரர்கள் விவேக் பிரசாத் 55வது நிமிடத்திலும், நீலகண்ட ஷர்மா 58வது நிமிடத்திலும் கோல் போட்டனர். ஆட்ட நேர முடிவில் இந்தியா 7-3 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று 3 புள்ளிகளை தட்டிச் சென்றது.
இந்தியா 4 லீக் ஆட்டத்தில் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை போலந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Sultan Azlan Shah Hockey Canada , Sultan Azlan Shah Hockey, Canada, India Goal rain, Manthapping hat trick
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...