×

கோவை சிறுமி கொலை விவகாரம் : குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை...மாவட்ட ஆட்சியர் உறுதி

கோவை; கோவையில் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைதுசெய்யக் கோரி கோவை ஆட்சியர் மற்றும் எஸ்.பி-யிடம் சிறுமியின் பெற்றோர், மகளிர் அமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, சிறுமியின் கொலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விரைவில் உரிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றார். முன்னதாக கோவை மாவட்டம் துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியில் பிரதீப்- வனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். பிரதீப் துப்புரவு வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் குழந்தையின் வயது 7. அந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 1ம் வகுப்பு படித்து வந்தார். மற்றொரு பெண் குழந்தைக்கு வயது 5. இந்த நிலையில் 1ம் வகுப்பு படித்து வரும் சிறுமி நேற்று முன்தினம் காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியிருக்கிறார். சுமார் 4 மணியிலிருந்து 6 மணி வரை அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சிறுமியை தேடி வந்துள்ளனர். ஆனால் எங்கு தேடியும் அந்த குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் இரவு 8 மணி முதல் அதிகாலை 2 மணி வரை காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை தொடர்ந்து, நேற்று காலை சுமார் 7 மணி அளவில் இந்த தம்பதி வசித்து வரும் வீட்டிற்கு அருகே உள்ள சிறிய சந்து பகுதியில் உடல் முழுவதும் காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்கப்பட்டார். காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், குழந்தையின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. பின்னர் சிறுமியின் சடலம் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். சிறுமியின் உறவினர்கள் உரிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,District Collector , Coimbatore girl, raped, murdered
× RELATED கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள்...