×

திப்பம்பட்டி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி: திப்பம்பட்டி மாட்டு சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்ததால் சந்தை பரபரப்புடன் காணப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட இடத்தில் உள்ள மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி சென்றனர். ஆனால், கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் திப்பம்பட்டியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மாட்டு சந்தையால், நகராட்சி மாட்டு சந்தைக்கு மாடுகள் வரத்தின்றி நின்றுபோனது. இதையடுத்து நகராட்சி சந்தையில் குத்தகை எடுத்தவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர்.

பின் விசாரணைக்கு வரபெற்ற அந்த வழக்கில், திப்பம்பட்டியில் உள்ள மாட்டு சந்தை எந்தவித அனுமதியின்றியும், முகாந்திரம் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், திப்பம்பட்டியில் உள்ள தனியார் இடத்தில் தொடர்ந்து மாட்டு சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் நேற்று, திப்பம்பட்டியில் நடந்த சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் மாடுகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தது.

அதிலும் கன்று குட்டிகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. மாடுகளை வாங்க சுற்றுவட்டார கிராம பகுதி வியாபாரிகள் மற்றும் கேரள மாநில பகுதியிலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர்.  மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்ததால், பெரும்பாலான மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் கடந்த வாரம் ரூ.32 ஆயிரத்துக்கு விற்பனையான காளைமாடு ரூ.36 ஆயிரத்துக்கும். ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனையான பசுமாடு  ரூ.34 ஆயிரத்துக்கும், ரூ.32 ஆயிரத்துக்கு விற்பனையான எருமை மாடு ரூ.38 ஆயிரத்துக்கும், கன்று குட்டிகள் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் என கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thampampatti , Thippampatti, market, cow, sale
× RELATED புனிதவெள்ளி நோன்பு கடைபிடிப்பால்...