×

வீடு தேடி வந்தாலும் இனி ஆனந்தனுக்கு ஓட்டுப்போட மாட்டோம்: அதிமுக தொண்டர்கள் கோபம்

தன்னை வரவேற்க காத்திருந்த தொண்டர்களை சந்திக்காமல் திருப்பூர் அதிமுக வேட்பாளர் ஆனந்தன்  புறக்கணித்து சென்றதால், ‘வீடு தேடி வந்தாலும் இனி ஓட்டுப்போட மாட்டோம்’ என்று அதிமுக தொண்டர்கள் கூச்சலிட்டனர். இது வேட்பாளரை கலக்கமடைய செய்துள்ளது. திருப்பூர் மக்களவை  தொகுதியில் திருப்பூர் கிழக்கு, மேற்கு தவிர பெருந்துறை உள்ளிட்ட மீதி நான்கு சட்டசபை  தொகுதிகள் ஈரோடு மாவட்டத்தில் உள்ளன. பெருந்துறையில் நடக்கும் தேர்தல் பணிமனை திறப்புவிழாவில் அதிமுக வேட்பாளர்  ஆனந்தனும், அமைச்சர் செங்கோட்டையனும் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களை வரவேற்க  மாவட்ட எம்ஜிஆர்  இளைஞரணி இணை செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் பெருந்துறை அரசு மருத்துவமனை  அருகே  ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர்.

ஆனால், வேட்பாளர் ஆனந்தனும், அமைச்சர் செங்கோட்டையனும் அந்த வழியாக வராமல்  வேறுவழியாக திறப்பு  விழாவிற்கு சென்றுவிட்டனர். இதனால், காலையில் இருந்து கடுமையான வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். பணிமனை  திறப்பு விழா முடிந்து வேட்பாளர் வருவார் என தொண்டர்களிடம் நிர்வாகிகள் தெரிவித்தனர். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மேளதாளங்கள்  முழங்க அதே இடத்தில் ஏராளமான அதிமுகவினர் காத்திருந்தனர். ஆனால், திறப்பு விழா முடிந்ததும், வேட்பாளரும், அமைச்சரும் அந்த வழியாக வராமல் வேறுவழியாக சென்றுவிட்டனர். இதனால், ஆத்திரமடைந்த தொண்டர்கள் ‘இனி வீடு  தேடி வேட்பாளர் வந்தாலும் வாக்களிக்க மாட்டோம்’ என்று கோபத்துடன் கூச்சலிட்டவாறு   கலைந்து சென்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anandan , vote, Anandhan, AIADMK
× RELATED வசந்தகுமார் எம்பி மறைவு குமரிஅனந்தன் உண்ணாவிரதம்