×

டிரைவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திடீர் தர்ணா: மதுராந்தகம் அருகே பரபரப்பு

சென்னை: மதுராந்தகம் அருகே கார் டிரைவரை சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கியதால் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கடலூரில் இருந்து நேற்று அதிகாலை காரில் சென்னைக்கு புறப்பட்டார். காரை அவரது டிரைவர் பாஸ்கர் (30) என்பவர் ஓட்டி வந்தார். காலை சுமார் 6.30 மணியளவில் அவர்களின் கார் மதுராந்தகம் அடுத்த தொழுப்பேடு சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது, அங்கிருந்த ஊழியர், சுங்கக்கட்டணம் கேட்டுள்ளார். அதற்கு டிரைவர், அனுமதி சீட்டு ஒன்றை காட்டினார். ஆனால், சுங்க கட்டணம் வசூலிப்பது வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதில் எழுதி இருந்த வாசகம் எதுவும் ஊழியருக்கு, புரியவில்லை. இதனால், வேல்முருகன் வந்த கார் செல்ல சுங்க ஊழியர்கள்  அனுமதிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

 இதனால் டிரைவருக்கும், ஊழியருக்கும் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைபார்த்து சுங்கச்சாவடியில் இருந்த மற்ற ஊழியர்கள் ஓடி வந்து பாஸ்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வேல்முருகனும் அவர்களை  தட்டி கேட்டுள்ளார். அப்போதும் சமாதானம் அடையாமல் சுங்கச்சாவடி ஊழியர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு பதற்றம் அதிகரித்தது. அப்போது, திடீரென சுங்க ஊழியர்கள் டிரைவரை சரமாரியாக தாக்கினர். இதைபார்த்த வேல்முருகன் உடனே சுங்கச்சாவடி ஊழியர்களின் செயலை கண்டித்து  சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். உடனே அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்தை சாலையில் நிறுத்திவிட்டு வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து அச்சிறுப்பாக்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கார் டிரைவர் பாஸ்கரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் வடமாநிலத்தை சேர்ந்த சுனீல் யாதவ் (23), ஆசிப் யாதவ் (28) மற்றும் அச்சிறுப்பாக்கம் அடுத்த கொங்கரைமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த விநாயக மூர்த்தி (26) ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். இதன்பிறகு வேல்முருகன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Velmurugan , Driver, Velamurugan, Dharna, Maduranthagam
× RELATED சிறுமியுடன் திருமணம் வாலிபர் மீது போக்சோ வழக்கு