×

பெங்களூரு வடக்கு தொகுதியை காங்கிரசுக்கு திருப்பி கொடுத்த தேவகவுடா எங்ககிட்ட வேட்பாளர் இல்ல... நீங்களே வச்சுக்குங்க...

கர்நாடகாவில் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை சந்திக்கும் காங்கிரசும், மஜத.வும் மொத்தமுள்ள 28 தொகுதிகளை பிரித்து கொண்டன. அதன்படி, 20 தொகுதிகளில் காங்கிரசும், 8 தொகுதிகளில் மஜத.வும் போட்டியிடுகின்றன. மஜத தேசிய தலைவர் தேவகவுடா, ஹாசன், மண்டியா தொகுதிகளை தனது பேரன்களுக்கு விட்டுக் கொடுத்து விட்டார். இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்தார். பின்னர், தொண்டர்களின் வற்புறுத்தலால் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். துமகூரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்தார். இதற்கு இத்தொகுதியில் தற்போது காங்கிரஸ் எம்பி.யாக இருக்கும் முத்தஹனுமே கவுடா எதிர்ப்பு தெரிவித்தார். இருந்தாலும் கூட்டணி சார்பில் தேவகவுடா அங்கு வேட்புமனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்பி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். இதனால், இங்கு   தோற்கடிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்த தேவகவுடா, பெங்களூரு வடக்கு தொகுதியிலும் போட்டியிட முடிவு செய்தார்.

நேற்று முன் தினம் அங்கு வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அத்தொகுதியை காங்கிரசுக்கே திருப்பி கொடுத்து விட்டார். துமகூருவில் போட்டியிடுவதால் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் முடிவை கடைசி நேரத்தில் தேவகவுடா மாற்றிக் கொண்டார். மேலும்,  அத்தொகுதிக்கு மஜத.வில் பொருத்தமான வேட்பாளர் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, அத்தொகுதியை காங்கிரசுக்கு தேவகவுடா திருப்பி கொடுத்து விட்டார். இதனால், அத்தொகுதியில் தற்போது அமைச்சராக இருக்கும் கிருஷ்ணபைர கவுடாவை வேட்பாளராக காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது. இவர் பாஜ வேட்பாளரும், மத்திய அமைச்சருமான சதானந்த கவுடாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.  இதே போன்று பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜ சார்பில் பிரதமர் நரேந்திரமோடி போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்தது. அப்படி அவர் போட்டியிடா விட்டால் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அனந்த்குமார் மனைவி தேஜஸ்வினிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது பொய்யாக போனது. அத்தொகுதியில் பாஜ இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு மறைந்த மத்திய அமைச்சர் அனந்த் குமாரின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர்களை சந்தித்த தேஜஸ்வினி, ‘இது எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நேரமில்லை. அனைவரும் ஒற்றுகையாக செயல்பட்டு பாஜ வேட்பாளருக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.  பெங்களூரு ஊரக தொகுதிக்கு  அஸ்வத் நரேன் என்பவரை  பாஜ வேட்பாளராக அக்கட்சி அறிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Bengaluru ,Congress ,north , Bangalore North Block, Congress, Deve Gowda, Candidate
× RELATED பாஜவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை:...