×

ஓசூர் அருகே கானலட்டியில் விளைநிலத்தில் புகுந்த 5 யானைகள் : ராகி, தக்காளி செடிகள் சேதம்

ஓசூர்: ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளில் நேற்று முன்தினம் 5 யானைகள் கானலட்டி கிராமத்துக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் 5 ஏக்கரில் பயிரிட்டிருந்த ராகி, தக்காளி செடிகளை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்த சென்றன. கிருஷ்ணகிரி மாவட்டம்  ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் தற்போது 7 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று காலை 5 யானைகள் செட்டிப்பள்ளியில் இருந்து சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. இதனால் யானைகளின் எண்ணிக்கை  12 ஆக உயர்ந்தது. இந்த யானைகள் தினமும் பல குழுவாக பிரிந்து, வனப்பகுதி ஒட்டிய கிராமங்களுக்கு சென்று, அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள தானியங்கள் மற்றும் காய்கறிகளை சேதப்படுத்தி வருகின்றன.

நேற்று சானமாவு வனப்பகுதியில் இருந்து கானலட்டி கிராமத்துக்குள் புகுந்த 5 யானைகள், அங்கு விவசாயிகள் 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டிருந்த தக்காளி, ராகி பயிரை  தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி விட்டு சென்றன. நேற்று முன்தினம் அம்பலட்டி கிராமத்தில் வேறு சில யானைகள் கூட்டம் புகுந்து ராகி பயிரை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. சானமாவு வனப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பீர்ஜேப்பள்ளி, ராமபுரம், சப்படி, கோபசந்திரம், ஆலியாளம், பாத்தகோட்ட ஆகிய கிராமங்களுக்கு கூட்டம் கூட்மாக செல்லும் யானைகள், விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள காய்கறிகள், பயிர்களை சாப்பிட்டு விட்டு தென்பெண்ணை நதியில் குளித்து, கரைகளில் ஓய்வெடுக்கின்றன.

கோடை காலம் தொடங்கியதால் கிணறுகளில் தண்ணீர் வற்றிய நிலையில், இருக்கும் தண்ணீரை கொண்டு பயிர்களை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் யானைகள் கிராமத்துக்குள் புகுந்து காய்கறி பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர். வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, யானை கூட்டம் கிராமங்களுக்குள் நுழைவதை தடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hoshiarai ,Hosur ,Ragi , Hosur, elephants, ragi, tomatoes
× RELATED பறிமுதலான வாகனங்கள் ₹25 லட்சத்திற்கு ஏலம்