×

வறண்டு கிடக்கும் மூலவைகை : கடமலை-மயிலையில் கடும் குடிநீர் பஞ்சம்

வருசநாடு: கடமலை  மயிலை ஒன்றியத்தில் மூலவைகை ஆறு வறண்டு கிடப்பதால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடமலை மயிலை ஒன்றிய நிர்வாகத்திற்கு உட்பட்டு 18 ஊராட்சி மன்றங்கள் உள்ளன. இந்த 18 ஊராட்சி மன்றங்களும் மூல வைகை ஆற்றின் மூலம்  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நீர்பிடிப்பு பகுதிகளான அரசரடி, வெள்ளிமலை, போன்ற பகுதிகளில் கோடை மழை பெய்யவில்லை. எனவே, இதனைத் தொடர்ந்து கடமலை   மயிலை ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சம் தற்போது நிலவி வருகிறது.

இந்த நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை போன்ற பகுதிகளில்  ஆழ்துளை கிணறு மூலம் தனியார் தோட்டங்களில் இருந்து தள்ளு வண்டிகளில் பொதுமக்கள் குடிநீர் எடுத்து வருகின்றனர். இதே நிலை நீடித்தால் தனியார் தோட்டங்களிலும் ஆழ்துளைக் கிணறுகளிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்படும் அபயாம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேனி மாவட்டத்திற்குட்பட்ட கடமலை மயிலை ஒன்றியத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்குவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் மலைப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளும் தண்ணீர் தேடி தனியார் தோட்டங்களுக்கு வரத்தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாக மான், கரடி, கேளை ஆடு உள்ளிட்டவரை குடிநீரை தேடிவரும் போது வாகனம் மோதி உயிரிழந்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் குடிநீர் தொட்டி அமைத்து விலங்குகளை காப்பாற்றும் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளது. கடமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த ரமேஷ் கூறுகையில், தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் ஒன்றிய பகுதிகளில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் பஞ்சத்தை போக்க வேண்டும். இல்லையென்றால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kadimalai , Mulavaikai, katamalai, drinking water
× RELATED கடமலை - மயிலை ஒன்றியத்தில் கண்மாய்கள்...