×

நவமலை குடியிருப்பு பகுதியில் யானை புகுவதை தடுக்க வனத்துறையினர் கண்காணிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த, நவமலை குடியிருப்பு பகுதியில், மீண்டும் காட்டு யானை பகல் நேரத்தில் வந்து செல்வதால், அதை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த வனப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால், அடர்ந்த காட்டிலிருந்து யானை உள்ளிட்ட விலங்குகள் நீர்நிலையை தேடி இடம் பெயர்கிறது. இதில் ஆழியார் அணையையொட்டியுள்ள காட்டு பகுதியிலிருந்து ஒற்றை யானை, அடிக்கடி சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடங்களில் சுற்றித்திரிவதால், அங்குவரும் சுற்றுலா பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் குரங்கு அருவியருகே யானைகள் வராமல் தடுக்க, வனத்துறை ஊழியர்கள் ஆங்காங்கே நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த ஒற்றை யானை தற்போது, நவமலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் பகல் நேரத்திலிலேயே அடிக்கடி உலா வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு, நவமலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை, பல மணிநேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தது. இதையறிந்த வனத்துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று, நவமலை குடியிருப்பு பகுதியில் பட்டாசு வெடித்து, பலமணி நேரம்  போராடி அடர்ந்த காட்டிற்குள் யானையை விரட்டினர். நவமலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி காட்டு யானை நடமாடுவதால், அங்கு வசிப்போருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, குடியிருப்பு மற்றும் சுற்றுலா பகுதிகளில் யானை வருவதை தடுக்க, தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : arrival ,area ,Navalakam , Navamalai, elephant, acrobatics
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு