×

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா சதி செய்ததாக எந்த ஆதாரமும் இல்லை: அட்டர்னி ஜெனரல் அறிவிப்பு

வாஷிங்டன்: ‘‘அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், டிரம்ப் பிரசார குழுவினர், ரஷ்யாவுடன் இணைந்து சதி செயலில் ஈடுபடவில்லை’’ என அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தில்  அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் ரஷ்யர்களின்  குறுக்கீடு இருந்ததால், ஹிலாரி தோல்வியடைந்ததாக ஜனநாயக கட்சியினர் குற்றம் சுமத்தினர். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க முன்னாள் எப்பிஐ இயக்குனர் ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கடந்த 22 மாதங்களாக இந்த விசாரணையை நடத்தினர். அதிபர் தேர்தலில் பாதிப்பை ஏற்படத்த ரஷ்யா மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் நீதியை அதிபர் டிரம்ப் தடுத்தாரா? என்ற இரு பிரிவுகளின் கீழ் இந்த  விசாரணை நடந்தது.

இந்நிலையில் தனது விசாரணை அறிக்கையை ராபர்ட் முல்லர், அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பாரிடம் கடந்த 22ம் தேதி சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின் சுருக்கத்தை அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அட்டர்னி  ஜெனரல் அனுப்பினார். அதில் கூறியிருப்பதாவது:டிரம்ப் பிரசார குழுவினருக்கு உதவ ரஷ்ய ஆதரவு தனிநபர்கள் பலர் முன்வந்தும், டிரம்ப் குழுவினர் சதியில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. நீதியை சட்டவிரோதமாக டிரம்ப் தடுத்தாரா என்பது பற்றி முல்லர் குழு  எந்த முடிவுக்கும் வரவில்லை. எனவே அதிபர் டிரம்ப் குற்றம் செய்தார் என்பதை நிருபிக்க, முல்லர் குழு விசாரணை அறிக்கையில் போதிய ஆதாரங்கள் இல்லை என அட்டர்னி ஜெனரலும், துணை அட்டர்ஜி ஜெனரல் ராட் ஜே ரோசன்ஸ்டீன் ஆகியோரும்  தீர்மானித்துள்ளோம். இந்த விசாரணை அறிக்கை டிரம்ப் குற்றம் செய்தார் என்ற முடிவுக்கும் வரவில்லை, நீதியை தடுத்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாகவும் கூறவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியீடு டிரம்ப்க்கு கிடைத்த முக்கியமான அரசியல் வெற்றி என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Attorney General ,Russia ,US ,announcement ,election , US presidential ,election Russia, evidence, conspiracy
× RELATED வடகிழக்கு மாநில மக்களை கைவிட்டுவிட்ட...