×

திமுகவிலிருந்து ராதாரவி திடீர் நீக்கம்

சென்னை: நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவி திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த ‘கொலையுதிர்காலம்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து நடிகர் ராதாரவி சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகர் ராதாரவிக்கு, சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அவர் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘நடிகர் ராதாரவி கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் தற்காலிகமாக திமுகவிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வருத்தம் தெரிவித்தார்


நடிகை நயன்தாரா தொடர்பாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ‘‘கொலையுதிர்காலம் டிரைலர் வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. நான் பேசியது உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நடிகர் ராதாரவி விளக்கமளித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் கண்டனம்


பெண் கலைஞர்கள் குறித்து நடிகர் ராதாரவி விமர்சித்து பேசியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். திரைத்துறை பெண் கலைஞர்கள் பற்றி நடிகர் ராதாரவி விமர்சித்து பேசியது தொடர்பாக, திமுகவில் இருந்து அவர் உடனடியாக நீக்கப்பட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில், அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவி திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்து கூறியிருக்கும் கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Radaravi ,DMK , Radaravi, dismiss, DMK
× RELATED திருவள்ளூர் நகர திமுக ஆலோசனை கூட்டம்