இளங்கோவன், கனிமொழி, தமிழிசை மனுத்தாக்கல்

சென்னை:மக்களவை தேர்தலில் போட்டியிட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கனிமொழி, தமிழிசை   உள்ளிட்டோர் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். தேனி மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் பல்லவி பல்தேவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். திருச்சி: திருச்சி மக்களவை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தூத்துக்குடி: தூத்துக்குடி தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி, திமுக வேட்பாளர் கனிமொழி, விவிடி சிக்னல் பகுதியில் இருந்து நேற்று மதியம் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்தார்.

அவருடன் வந்தவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தப்பட்டனர். பின்னர் கனிமொழி தனது வேட்பு மனுவை, மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தார். தூத்துக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் தமிழிசை வேட்பு மனு தாக்கல் செய்ய தனது ஆதரவாளர்கள் புடைசூழ கலெக்டர் அலுவலகம் வந்தார். பின்னர் தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரி சந்தீப் நந்தூரியிடம் தாக்கல் செய்தார். சிவகங்கை: சிவகங்கை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று, சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தாமரை சின்னத்துடன் வந்த எச்.ராஜா
சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜ வேட்பாளர் எச்.ராஜா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக எச்.ராஜாவுடன் ஏராளமானோர் வந்தனர். அவர்களை தடுக்காமல் போலீசார் அனுமதித்தனர். இதனால் வேட்பு மனு அளிக்கும் கலெக்டர் அறையில் 20க்கும் மேற்பட்டோர் குவிந்திருந்தனர். மற்ற கட்சியினரிடம் தேர்தல் விதிமுறைகளை கூறி கெடுபிடி காட்டும் போலீசார் எதுவும் கூறாமல் அமைதியாய் வேடிக்கை பார்த்தனர். எச்.ராஜா கையில் பாஜ சின்னமான தாமரையுடன் வந்தார்.

ேவட்புமனு தாக்கலுக்கு எச்.ராஜா கேரள பதிவெண் கொண்ட நூற்றுக்கணக்கான கார்களில் காரைக்குடியில் இருந்து ஊர்வலமாக வந்தார். அவரை சிவகங்கை அருகே பெருமாள்பட்டி விலக்கில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த பெண்களுக்கு தலா ரூ.500 வழங்கப்பட்டது. இதுபோல் ஊர்வலத்தில் கலந்துகொள்ள லோடு வேன்களில் அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.500, ஒரு பிரியாணி பொட்டலம் வழங்கப்பட்டது.

சின்னம் இருந்ததால் சட்டையை கழற்றச் சொன்ன போலீஸ்
மக்கள் நீதி மய்யம் சார்பில் சேலம் தொகுதியில் போட்டியிடும் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த பிரபு மணிகண்டன் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தார். அவர் கட்சியின் சின்னம் போட்டிருந்த சட்டை மற்றும் துண்டை அணிந்திருந்தார். அதனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சட்டையை மாற்றிவிட்டு வேட்புமனுதாக்கல் செய்ய செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர் சட்டையை மாற்றிவிட்டு வேட்புமனுதாக்கல் செய்ய சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ilangovan ,Kanimozhi ,Tamilnadu , Ilangovan, Kanimozhi, Tamilnadu, petition
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...