×

‘மோடி பேர சொன்னா சப்னு அறைங்க’: சர்ச்சையான மஜத எம்.எல்.ஏ. பேச்சு

பிரதமர் மோடியின் பெயரைக்கூறி வாக்கு கேட்டு வருவோரின் கன்னத்தில் பளார் என்று அறை விடுங்கள் என மஜத தொண்டர்களிடம் கர்நாடக எம்.எல்.ஏ. சிவலிங்கே கவுடா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் அரசிகெரே சட்டப்பேரவை தொகுதியில் இரு தினங்களுக்கு முன் மக்களவை தேர்தலை எதிர்கொள்வது குறித்த மஜத  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தொகுதி எம்.எல்.ஏ.வான கே.எம்.சிவலிங்கே கவுடா கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது: மத்தியில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு எந்த வகையான நல திட்ட உதவிகளையும் செய்யவில்லை. குறிப்பாக விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்யவில்லை.

வெளிநாடுகளில் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் தலா ரூ.15 லட்சம் போடப்படும் என மோடி அறிவித்தார். ஆனால், 5 ஆண்டுகள் ஆகியும், வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டெடுக்கவில்லை.
இந்த பணத்திலிருந்து நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் இதுவரை ஒரு ரூபாய் கூட செலுத்தவில்லை. மேலும், நாட்டு மக்களுக்கு பயன்பெறும் வகையில் எந்த ஒரு வளர்ச்சி பணிகளையும் அமல்படுத்தவில்லை. இதுபோன்ற பயனற்ற தலைவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? நாட்டு மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வகையில் வளர்ச்சிப் பணிகளை செய்யாத பிரதமர் மோடியின் பெயரைக்கூறி யாராவது வாக்கு கேட்க வந்தால், அவர்களின் கன்னத்தில் பளார் என்று அறையுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். அவரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ. சிவலிங்கேகவுடாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பாஜவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து, பாஜவினர் தேர்தல் ஆணையத்தில் எம்.எல்.ஏ.  சிவலிங்கேகவுடா மீது புகார் அளிக்க உள்ளனர். திடீர் பல்டி: இந்நிலையில் தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், சிவலிங்கேகவுடா திடீரென பல்டி அடித்துள்ளார். ‘‘இது மூன்று நாட்களுக்கு முன் நான் பேசிய வீடியோ காட்சியாகும். நான் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சனம் செய்ததாக கூறி சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், நான் பேசியபோது பிரதமரை எந்த வகையிலும் கொச்சைப்படுத்தியோ அல்லது அவமானப்படுத்தும் வகையிலோ பேசவில்லை. நான் பேசியதை சிலர் கம்ப்யூட்டர் மூலம் வேறு விதமாக ஜோடித்து எனக்கு எதிராக வெளியிட்டுள்ளனர்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,MLA ,Speech , Modi, Majatha MLA
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...