×

கனிமொழி, திருநாவுக்கரசர், தமிழிசை உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இன்று வேட்புமனு தாக்கல்...

சென்னை: தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை முடிவடைய உள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

சென்னை: தென்சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அடையாறு மண்டல அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையை மையமாக கொண்டு பிரச்சாரம் செய்யவிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பெரம்பலூர்: பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவபதி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

மதுரை: மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தேனி: தேனி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

சேலம்: சேலம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா அம்மையப்பன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதே தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணனும் வேட்புமனு தாக்கல் செய்தார்.

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், இதே தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நடராஜன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, மனுத்தாக்கல் செய்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

திருச்சி: திருச்சியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன், வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் ஹெச்.வசந்தகுமார் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து ஹெச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார்.

சிவகங்கை: சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா போட்டியிடுகிறார்.

இதேபோல் மற்ற தொகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் இதுவரை 262 ஆண்கள், ஒரு திருநங்கை உட்பட 300க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இடைத்தேர்தலில் போட்டியிட 125 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : personalities ,Thirunavukkarar ,Tamilnadu ,Kanimozhi , Lok Sabha election, candidates, nomination, Kanimozhi, Tamilisai
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு