×

அமமுகவிற்கு நிச்சயமாக குக்கர் சின்னம் கிடைக்கும் : டிடிவி தினகரன் பேட்டி

சென்னை : அமமுகவிற்கு குக்கர் சின்னம் நிச்சயமாக கிடைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தினகரன் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமமுக கட்சி பதிவு செய்யப்படாததால் குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இதையடுத்து அமமுகவுக்கு பொதுச்சின்னமாக குக்கர் சின்னத்தை ஒதுக்குவதில் என்ன பிரச்னை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து தேர்தல் ஆணையம் உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு நாளை காலை 10.30 மணி வழக்கை ஒத்தி வைத்தனர். இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், அமமுகவிற்கு குக்கர் சின்னம் நிச்சயமாக கிடைக்கும் என்றும், குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் இல்லை என்பதை உச்சநீதிமன்றமே கூறியுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் எங்களுக்கு பொதுவான சின்னம் ஒதுக்காது என்பது எங்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். அதிமுகவை உரிமை கோரி வழக்கு நடைபெற்று வந்ததால் தான் கட்சியை பதிவு செய்யவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும், நாளை காலை வழக்கு விசாரணைக்கு பிறகு அமமுக வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார். குக்கர் சின்னம் வழக்கில் எங்கள் நிலைமையினை கருத்தில் கொண்டு எங்களுக்கு பொதுச் சின்னம் வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை என அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும், 99.9 சதவிதம் குக்கர் சின்னம் கண்டிப்பாக அமமுக கட்சிக்கு கிடைக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ammuku ,interview ,DTV Dinakaran , Cooker logo, TTV Dinakaran,sc,election commision
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...