×

மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி அன்புமணி மீது சிபிஐ தொடர்ந்த 2 ஊழல் வழக்குகள் நிலுவை: வேட்புமனுவில் தகவல்

சென்னை: தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் அன்புமணி மீது மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சி.பி.ஐ தொடர்ந்த 2 ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. தர்மபுரி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி போட்டியிடுகிறார். இவர் தனது வேட்புமனுவோடு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் அவர் மீது  நிலுவையில் உள்ள வழக்குகள் விவரத்தை குறிப்பிட்டுள்ளார். அதில், சிபிஐ தொடர்ந்த 2 ஊழல் வழக்குகள் உட்பட மொத்தம் 12 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்குகள் விவரம்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்டக்ஸ் மருத்துவ கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லாததால் அங்கு 2008-09ம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சில் தடை  விதித்தது. உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவும் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க பரிந்துரைத்திருந்தது. இதையெல்லாம் மீறி அப்போது மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்த அன்புமணி, அந்த கல்லூரியில் எம்.பி.பி.எஸ்  படிப்பில் மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கினார்.

இதேபோல் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள ரோஷில்கண்ட் மருத்துவக் கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லாதபோதும் அதன் உரிமத்தை மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி சட்டவிரோதமாக புதுப்பித்ததாக  புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக அன்புமணி மீது சி.பி.ஐ 2 ஊழல் வழக்குகளை பதிவு செய்தது. இந்த ஊழல் வழக்குகள் ெடல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இரு  வழக்குகளிலும் அன்புமணி மீது கடந்த 2015ம் ஆண்டு, முறைப்படி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBI ,Dravida Munnetra Kazhagam , Allow medical colleges,abused,filed,the notice
× RELATED மோடியின் வெளிநாடு பயணங்களால்...