×

மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடாமல் நிறுவனம் தேர்வு: பொதுப்பணித் துறையில் சர்ச்சை

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் ₹40 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு பணிக்கு டெண்டர் விடாமலேயே ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டிருப்பது பொதுப்பணித் துறையில் சர்ச்சையை  ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மருத்துவ கல்வி இயக்குனரக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கட்டிட பராமரிப்பு பணிக்கு ₹40 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒவ்வொரு தளங்களிலும் சுவரை  அழகுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு மட்டும் ₹24 லட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த மாதம் பிப்ரவரியில் பொதுப்பணித்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டு டெண்டர் விடப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிட்டது.  இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்பிறகு டெண்டர் வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்க பொதுப்பணித்துறை தலைமை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யாமலேயே பணிகள் நடந்து வருவதாக எம்புக்கில்  கணக்கு காட்டியதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக புகார் எழுந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பித்த 2க்கும் மேற்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் புகார் அளிக்க திட்டமிட்டது. இதை தொடர்ந்து ஒப்பந்தம் விடாமல், பணிகளுக்கு நியமன முறையில் ஒப்பந்த  நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது போன்று ₹1 லட்சம் வீதம் பேக்கேஜ் அடிப்படையில் பணிகளை பிரித்து அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்கள் மூலம் உடனடியாக பணிகளை தொடங்கியதாக தெரிகிறது. இந்த சம்பவம் பொதுப்பணித்துறை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கான்ட்ராக்டர்கள் சிலர் கூறுகையில், ‘‘பொதுப்பணித்துறை சார்பில் டெண்டருக்கு விண்ணப்பித்த நிறுவனங்களை அழைத்து ஒப்பந்த பெட்டியை திறக்க வேண்டும். அதில், குறைந்த விலை புள்ளியை குறிப்பிட்ட  ஒப்பந்த நிறுவனங்களுக்கு டெண்டர் விட வேண்டும். ஆனால், தேர்தல் அறிவிப்பால் டெண்டர் திறக்கப்படவில்லை.

இந்த நிலையில், டெண்டர் விடாமலேயே எம்புக்கில் பணிகள் தொடங்கியதாக குறிப்பிடப்பட்டது. இது தொடர்பாக பிரச்சனை எழுந்ததால் தற்போது டெண்டர் விடாமலேயே, அதாவது, நியமன முறை என்ற அடிப்படையில் ஒப்பந்த  நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது போன்று ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு, அதிகாரிகள் தங்களுக்கு வேண்டப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் பணிகளை தொடங்கியுள்ளனர். இது, டெண்டர் நடைமுறைகளை மீறிய செயல். இதுகுறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வரும் காலங்களில் இது  போன்று அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க முடியும்’’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maintenance work, Directorate , Medical Education,Public Works
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...