×

விபத்து ஏற்படுத்திய டிரைவர் மீது நடவடிக்கை கோரி செம்மஞ்சேரி காவல் நிலையத்தை துப்புரவு பணியாளர்கள் முற்றுகை: அரசு பஸ் சிறைபிடிப்பு

துரைப்பாக்கம்: விபத்து ஏற்படுத்திய மாநகர பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் செம்மஞ்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 198வது வார்டுக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்கள் செல்வி (35), காமாட்சி (37) உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் நேற்று காலை சோழிங்கநல்லூர் - மேடவாக்கம் சாலையில், சுங்கச்சாவடி அருகே சாலையின் இருபுறமும் சூழ்ந்துள்ள மணல் குவியலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அடையாறில் இருந்து தாம்பரம் நோக்கி அதிவேகமாக சென்ற மாநகர பஸ், செல்வி மற்றும் காமாட்சி மீது மோதியது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சக பணியாளர்கள் மாநகர பேருந்தை சிறைபிடித்தனர். மேலும் படுகாயமடைந்த இருவரையும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி துப்புரவு பணியாளர்கள்  செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். அதற்கு போலீசார் சமாதானமாக செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு போலீசார், விபத்து சம்பந்தமாக புகார் அளிக்க வேண்டுமென்றால் கிண்டி போக்குவரத்து போலீசாரிடம் சென்று புகார் தெரிவியுங்கள் என கூறினர். இதனால் போலீசாருக்கும், துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்த மாநகராட்சி அதிகாரிகள், கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் அரசு பேருந்தின் டிரைவரிடம் போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், ‘புகார் கொடுக்கச் சென்ற எங்களை போலீசார் தரக்குறைவாக பேசுகின்றனர். இருவரும் சமாதானமாக சென்று விடுங்கள் எனக் கூறி மிரட்டுகின்றனர். இதேபோல கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சோழிங்கநல்லூர் ராஜிவ்காந்தி சாலையில் துப்புரவு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவச்சந்திரன் என்பவரை, செம்மஞ்சேரி போலீசார் காவல் நிலையத்தில் வந்து சுத்தம் செய்து செய்யும்படி அழைத்தனர். மறுத்த அவரை காலால் உதைத்தனர். தகவலறிந்து  துப்புரவு பணியாளர்கள் ஒன்று திரண்டு செம்மஞ்சேரி காவல் ஆய்வாளரிடம் முறையிட்டோம். நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து நாங்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டோம். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sampangari ,Police Station , accident driver, semmancheri, Police Station, Government Bus
× RELATED தொண்டி போலீஸ் ஸ்டேசனில் கூடுதல் போலீசார் நியமிக்க மக்கள் கோரிக்கை