வேட்பாளர்கள் பற்றி கவலையில்லை சூடான பிரியாணி கொடுங்க போதும்..... அறிமுக கூட்டத்தில் பாஜ தொண்டர்கள் கோஷம்

அறிமுக கூட்டத்துக்கு அதிமுக வேட்பாளர்கள் வரவில்லை என்றால் பரவாயில்லை, சூடான பிரியாணி கொடுங்க நாங்க வீட்டுக்கு போகிறோம் என்று பாஜ தொண்டர்கள் கோஷம் போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும் தற்போதைய எம்பியுமான மரகதம்குமரவேல், மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரும் அதிமுக மத்திய மாவட்ட செயலாளருமான ஆறுமுகமும் மீண்டும் போட்டியிடுகிறார். வேட்பாளருக்கான அறிமுக கூட்டம் செங்கல்பட்டு ராதாமகாலில் நேற்று நடந்தது. பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புரட்சிபாரதம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக அறிமுக கூட்டம் நடத்தி வேட்பாளர் மரகதம் குமரவேலை அறிமுகம் செய்து வைத்து கோஷ்டி கானம் பாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த அறிமுக கூட்டத்தில், பாஜக மாநில செயலாளர் கே.பி.ராகவன், கோட்டப் பொறுப்பாளர் பாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பலராம் ரவி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆனால் வேட்பாளர் மரகதம் குமரவேல் காலை 10 மணி முதல் மாலை 3 வரை பாஜக நடத்திய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவர் இப்போது வருவார் அப்போது வருவார் என அறிவிப்பு மட்டுமே செய்யப்பட்டது. மேலும் இந்த கூட்டத்தில் பாஜக காஞ்சி தெற்கு மாவட்ட தலைவர் சிவசெந்தமிழ் அரசு பாஜக கூட்டத்தில் பங்கேற்கவில்லை. திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரும் அதிமுக மத்திய மாவட்ட செயலாளருமான ஆறுமுகமும் கலந்து கொள்ளவில்லை. செய்யூர், காஞ்சிபுரம், மதுராந்தகம், திருப்போரூர் செங்கல்பட்டை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பாஜவினர் கலந்து கொண்டனர். வேட்பாளர் வராததால் கோபமடைந்தனர். இதற்கு மேல் பசியை தாங்க முடியாது. சூடான பிரியாணியை சாப்பிட்டு நாங்க போய் கட்சி வேலையை பார்க்கிறோம். வேட்பாளர்கள் வந்தால் மைக் முன் நின்று அவர்களே தங்களை அறிமுகம் செய்து கொள்ளட்டும் என்று கூறிவிட்டு  அனைவரும் பிரியாணியை ஒரு பிடி பிடித்துவிட்டு கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

More
>