×

முதன் முறையாக களமிறங்கும் பாஜ, அமமுக, மக்கள் நீதி மய்யம் நான்கு முனைப் போட்டியை சந்திக்கும் தூத்துக்குடி

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, பாஜ, அமமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக கனிமொழி, அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜ சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளராக புவனேஸ்வரன், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளராக பொன்குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். தமிழகத்திலேயே மிகவும் பரபரப்பான தொகுதியாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி களம் காண்கிறது. திமுக தலைவராக இருந்து மறைந்த கருணாநிதியின் மகள் கனிமொழியும், பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரடியாக மோதுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே கனிமொழி, தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த திமுக கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் திருச்செந்தூரில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். திமுக வேட்பாளராக போட்டியிடும் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகேட்டு தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

திமுக வேட்பாளர் கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் முதல் ஆளாக தீவிரமாக இறங்கியுள்ளது திமுக மற்றும் அதன் கூட்டணி தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் பாஜ வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வரும் 25ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு வென்றது. இதனால் இந்த தேர்தலிலும் அதிமுகவிற்குதான் ஒதுக்கும் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜவுக்கு தூத்துக்குடி தொகுதி ஒதுக்கப்பட்டதால் அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து இன்னமும் மீளாமல் இருந்து வருகின்றனர். இதனால் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பிரசாரம் செய்வதற்குள் போதும் போதுமென ஆகிவிடும் என்று பாஜவினர் புலம்புகின்றனர். அமமுக வேட்பாளர் புவனேஸ்வரன், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்குமரன் ஆகியோரும் களத்தில் இறங்கியுள்ளதால் தூத்துக்குடி நாடாமன்ற தொகுதியில் நான்குமுனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajaj ,Ammukku , Bjp, Ammuk, People's Justice, Tuticorin ,four-term contest
× RELATED காங்கிரசில் இணைந்தார் கர்நாடக பாஜ எம்.பி