×

ஆந்திராவில் ஒரே நாளில் 60% விஐபிக்கள் மனு

ஆந்திராவின் மங்களகிரி, பீமவரம் உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷ், நடிகர்  பவன் கல்யாண் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் குண்டூர் மாவட்டம், மங்களகிரி சட்டப்பேரவை தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி  சார்பில் போட்டியிடுவதற்காக நேற்று முன்தினம் காலை தனது தந்தையும் முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் தாயார் புவனேஸ்வரியின் காலில்  விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார். பின்னர் லோகேஷூக்கு அவரது மனைவி பிராமினி ஆரத்தி எடுத்து வழியனுப்பி வைத்தார்.

முதல் முறையாக ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுத்  தாக்கல் செய்ய வீட்டில் இருந்து கட்சி தொண்டர்களுடன் பேரணியாக சென்று மங்களகிரி தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.  அப்போது அவருடன் தாயார் புவனேஸ்வரி, மனைவி பிராமினி, மகன் தேவான்ஷ் உடனிருந்தனர். இதுபோல், அனந்தப்பூர் மாவட்டம், இந்துபுரம் சட்டப்பேரவை தொகுதியில் மீண்டும் போட்டியிட நடிகரும் எம்எல்ஏவுமான பாலகிருஷ்ணா வேட்பு மனுத்  தாக்கல் செய்தார். ஜனசேனா கட்சியின் தலைவர் நடிகர் பவன் கல்யாண் விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்கா சட்டப்பேரவை தொகுதியில்  போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக பவன் கல்யாண் நேற்று முன்தினம் வேட்பு மனுத் தாக்கல்  செய்தார். இதேபோல், சித்தூர் மாவட்டம், நகரி சட்டப்பேரவை தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட எம்எல்ஏவும்  நடிகையுமான ரோஜா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதேபோன்று மாநிலம் முழுவதும் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில்  போட்டியிட தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், ஜனசேனா, பாஜ உட்பட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் என்று 60 சதவீத  வேட்புமனுத் தாக்கல் ஒரே நாளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : VIPs ,Andhra Pradesh , Andhra Pradesh, VIPs, petition
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி