×

சொந்தக்காரராக இருந்தாலும் தமிழிசைக்கு ஆசீர்வாதம் இல்லை : எச்.வசந்தகுமார் பேட்டி

சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடும் கனிமொழிதான் வெற்றி பெறுவார். இதில் உறவுக்காரரான தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு ஆசீர்வாதம் கூட கொடுக்க முடியாது என கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: என்னை இறக்குமதி வேட்பாளர் என்பதில் சிறிதளவும் உண்மை கிடையாது. அதுபோன்ற எண்ணம் யாருக்கும் வரவும் கூடாது. ஏனெனில், நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, ஓட்டுரிமை என அனைத்தும் இந்த தொகுதியில்தான் எனக்கு உள்ளது. மேலும் கன்னியாகுமரியை பொறுத்தமட்டில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளையும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கி வருகிறேன்.

இந்நிலையில் மத்திய அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு பொய் வாக்குறுதிகளை கொடுத்து கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்றார். தொகுதிக்கு என்று அவர் எதையும் செய்யவில்லை. சொந்த மாவட்டம் என்பதால் நான் வெற்றி பெற்றால் என் வருவாயில் ஒரு சதவீதத்தை மக்களுக்காக செலவிடுவேன். நான் வேட்புமனுவை வரும் 25ம் தேதியன்று தாக்கல் செய்ய உள்ளேன். தேர்தல் களத்தை பொறுத்தமட்டில் உறவு, பாசம் என்பதற்கு இடமில்லை. அதனால் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு எனது ஆசீர்வாதம் கண்டிப்பாக கிடையாது. அவர் தோற்பார். தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் வேட்பாளர் கனிமொழிதான் வெற்றி பெறுவார் என்பதில் சந்தேகம் கிடையாது. அதற்காக நான் கடுமையாக உழைக்கவும் தயாராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : H. Vasanthakumar ,Tamils , No blessing , Tamilisai: Owner H. Vasanthakumar
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு