×

கடந்த ஜனவரியில் மட்டும் 8.96 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது: இ.பி.எப் தகவல்

டெல்லி: கடந்த 17 மாதங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமைப்பு சார்ந்த துறைகளில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.) வெளியிட்டு உள்ளது. இதில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகளை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அதன்படி மேற்படி 17 மாதங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

மேற்படி மாதங்களில் சுமார் 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதன் மூலம் கடந்த 17 மாதங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக இ.பி.எப். நிறுவனம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

முன்னதாக, தேசிய புள்ளியியல் ஆணையம், வேலைவாய்ப்பு தொடர்பாக ஒரு தகவலை வெளியிட்டிருந்தது. அதில் நாட்டில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வேலையின்மை பெருகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஆதாரமாகக் கொண்டு, எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து, மத்திய அரசு வேலை வாய்ப்பு குறித்து தகவல் தெரிவித்தது. அதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 2017-18 ஆம் ஆண்டில் 2.51 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக, ரயில்வே துறையில் 99 ஆயிரம் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. . மேலும் மத்திய கலால் துறையில் 79 ஆயிரம், நேரடி வரி விதிப்புத் துறையில் 29 ஆயிரம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் இந்த எண்ணிக்கை 2018 -19 நிதியாண்டின் முடிவில் 3.79 லட்சமாக உயரும் என்றும் தெரிவித்திருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : EPF , January, New Jobs, EPF Information
× RELATED சொல்லிட்டாங்க…