×

மோதலுக்கு தயாரான பொன்.ராதாகிருஷ்ணன் - வசந்தகுமார் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் மகுடம் யாருக்கு?

நாகர்கோவில்: கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளரும் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யார் வெற்றி வேட்பாளர் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டு உள்ளது. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி கடந்த 2009ல் தொகுதிகள் சீரமைப்பு வாயிலாக உருமாற்றம் பெற்று ஏற்கனவே நாகர்கோவில் என்ற பெயரில் விளங்கி வந்த தொகுதியில் இருந்து புதிதாக உருவான தொகுதி. திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதியில் இருந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை சேர்த்துக்கொண்டு திருவட்டார் சட்டமன்ற தொகுதியை எண்ணிக்கையில் குறைத்து கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் உள்ளடக்கியதாக இப்போது கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி விளங்குகிறது.

இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ள கடைக்கோடி தொகுதியாக இருந்தாலும் கூட டெல்லி அதிகமாக  உற்று நோக்கும் தொகுதிகளில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முக்கியமானதாகும். 12 முறை காங்கிரஸ் வென்ற ெதாகுதி ஆகும். இந்த முறையும் தேசிய கட்சிகள் தான் களத்தில் உள்ளன. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக பொன். ராதாகிருஷ்ணன் வேட்பாளராக உள்ளார். காங்கிரஸ் சார்பில் எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ. வேட்பாளராக நேற்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் இவர்களுக்கு இடையே தான் போட்டி  பலமாக இருந்தது. இந்த முறையும் இவர்கள் தான் களத்தில் மோத உள்ளனர். கடந்த முறை வெற்றி வாய்ப்பை தவற விட்டு இருந்தாலும் இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவார் என எச். வசந்தகுமார் எம்.எல்.ஏ.வின் செயல்பாடுகளை மேற்கொள் காட்டி, காங்கிரஸ் கட்சியினர் பெருமிதம் கொள்கிறார்கள். 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை, 5 ஆண்டுகளில் பாரதிய ஜனதா அரசு செய்திருக்கிறது. பாலங்கள், சாலைகள் என சுமார் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை இந்த மாவட்டத்துக்கு பெற்று தந்துள்ள, பொன். ராதாகிருஷ்ணன் தான் வெற்றி பெறுவார் என்று பா.ஜ.வினரும் கூறி வருகிறார்கள்.

இரு பெரிய மலைகள் முட்டி மோத போகும் இந்த தொகுதியில் அமமுகவும் தனது வேட்பாளராக இன்ஜினியர் லெட்சுமணனை களத்தில் இறக்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இவர் புதியவர் என்றாலும், ஏற்கனவே மதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தல் களத்தில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தவர். இவர் தவிர நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும் களத்துக்கு வந்துள்ளனர்.  தேசிய கட்சிகளின் காட்டாற்று வெள்ளத்தில் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி போன்ற சிறிய கட்சிகளின்  வேட்பாளர்கள் எந்தளவுக்கு நீந்தி கரை சேர போகிறார்கள் என்பது சந்தேகம் தான்.  இந்த முறையும் வசந்தகுமாரும், பொன். ராதாகிருஷ்ணனும் மோதலுக்கு தயாராகி உள்ளனர். கடந்த 2014 தேர்தலில் மொத்தம் 5 முனை போட்டி இருந்தது. பா.ஜ., காங்கிரஸ், அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என தனித்தனியாக நின்றார்கள். ஆனால் இந்த முறை அப்படி  அல்ல. பா.ஜ.வுடன், அதிமுகவும், காங்கிரசுடன் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒருங்கிணைந்துள்ளன.  கடந்த தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 91 ஆயிரத்து 162 வாக்குகள் பதிவாகி இருந்தன. இதில் பொன். ராதாகிருஷ்ணன் 3 லட்சத்து 72 ஆயிரத்து 906 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வசந்தகுமார் 2 லட்சத்து 44 ஆயிரத்து 244 வாக்குகள்  பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜாண் தங்கம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 239 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட எப்.எம். ராஜரத்தினம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 933 வாக்குகளும் பெற்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பெல்லார்மின் 35 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்றார். கடந்த முறை ஓட்டுக்கள் சிதறின. இந்த சிதறல் தான் பொன். ராதாகிருஷ்ணனுக்கு வெற்றியை தேடி கொடுத்தது என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள்.
இந்த முறை திமுகவுடன், கூட்டணி என்பதால் காங்கிரசின் வெற்றி எளிதானது தான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். ஆனால் இந்த தேர்தல் தமிழகத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ெஜயலலிதா ஆகியோரின் மறைவுக்கு பின் நடக்கும் தேர்தல் ஆகும்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் : தொண்டர்களின் மனநிலை என்ன? என்பதை இந்த தேர்தல் நிச்சயம் காட்டும். அதே சமயத்தில் புதிய வாக்காளர்கள் எண்ணம் என்ன? பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் இந்த தேர்தல் நிரூபிக்கும். 50 ஆண்டு கால சாதனையை 5 ஆண்டுகளில் செய்திருக்கிறோம் என பா.ஜ.வினர் கூறி வருகிறார்கள். இவர்கள் கூறும் சாதனையை ெதாகுதி மக்கள் எவ்வாறு எண்ணுகிறார்கள் என்பதும் இதில் தெரிய வரும். வசந்தகுமார் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை தீவிர போராட்டத்துக்கு பின் இந்த தொகுதியை பெற்றுள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கு சீட் இல்லை. செயல் தலைவர்களுக்கு சீட் இல்லை என்றெல்லாம் காங்கிரசில் பேச்சுக்கள் இருந்த நிலையில், அதை எல்லாம் தாண்டி வசந்தகுமார் சீட் பெற்றதே மிகப்பெரிய சாதனையாகி உள்ளது.
இந்த தொகுதியில் ஏற்கனவே அவர் நன்கு அறிமுகம் ஆனவர் தான். குக்கிராமங்களிலும் வசந்தகுமாரின் பெயரை குறிப்பிடும் வகையில் ஏதாவது ஒரு வகையில் அவரின் பங்களிப்பு இருக்கும்.  

எனவே பொன். ராதாகிருஷ்ணனுக்கு மிகப்பெரிய சவாலாக  வசந்தகுமார் இருப்பார் என்பது மட்டும் நிச்சயம் ஆகும். பா.ஜ.வை பொறுத்தவரை ஏற்கனவே அவர்கள் தேர்தல் களத்தில் இறங்கி பணிகளை கிட்டத்தட்ட முடித்துள்ளனர். பூத் கமிட்டியில் தொடங்கி பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளனர். வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் தான் என்பது ஏற்கனவே தெரியும் என்பதால், அவர்களின் தேர்தல் பணியில் எந்த வித சுணக்கமும் இல்லை. காங்கிரசை பொறுத்தவரை நேற்று இரவு வரை யார் வேட்பாளராக இருக்கும் என்ற பரபரப்பும் இருந்தது.  இந்த பரபரப்புக்கு மத்தியில் தற்போது வசந்தகுமார் அறிவிக்கப்பட்டு உள்ளார். தங்களுக்கு எதிரணிகளே இல்லை. களத்தில் நாங்கள் தான் ஒரு அணி என வேட்பு மனு தாக்கல் செய்ததும் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் கடந்த முறையே பொன். ராதாகிருஷ்ணனுக்கு சவாலாக இருந்த வசந்தகுமாரை தான் களத்தில் இறங்கி இருக்கிறது காங்கிரஸ் கட்சி . எனவே தேர்தல் களம் இப்போது சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : conflict ,Radhakrishnan - Vasanthakumar Kanyakumari , Ponnarathakrishnan, Vasanthakumar, Kanyakumari, parliamentary constituency, crown
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...