சேமநல நிதி செலுத்தாத 5970 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் : தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்யும் நபர்கள், இரண்டு விதமான சேமநல நிதிகளை செலுத்த வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு 11 ஆயிரம், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு 3 ஆயிரம் சேமநல நிதியாக வழங்கவேண்டும். வழக்குரைஞர்கள் மரணமடைந்தால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக 7 லட்சமும், அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் 50 ஆயிரமும் சேம நல நிதியில் அவரது குடும்பத்துக்கு  வழங்கப்படும். இதில், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதி தவணை தொகையை தமிழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் செலுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த தொகையைச் செலுத்தாத வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், “தமிழகத்தில் 5 ஆயிரத்து 970 வழக்கறிஞர்கள், அகில இந்திய பார் கவுன்சிலுக்கு செலுத்த வேண்டிய சேமநல நிதிக்கான தொகையை செலுத்தவில்லை. எனவே, அவர்களை 5,970 பேரையும் வழக்கறிஞர் தொழில் இருந்து இடைநீக்கம் செய்கிறோம்.  இடைநீக்கம் செய்யப்பட்ட வழக்கறிஞர்கள்,உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட எந்த ஒரு நீதிமன்றத்திலும், தீர்ப்பாயங்களிலும் வழக்கறிஞராக ஆஜராக கூடாது”என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: