×

காங்.கின் பிட்ரோடா வலியுறுத்தல் பாலகோட் தாக்குதல் குறித்து கூடுதல் தகவல் வெளியிட வேண்டும்

புதுடெல்லி: ‘‘பாலகோட் தாக்குதல் குறித்து அரசு கூடுதல் தகவல்களை வெளியிட வேண்டும். இது குறித்து பிரதமரின் எதிர்வினையை பார்க்கும்போது, கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா என்ற குழப்பம் வருகிறது’’ என காங்கிரசின் சாம் பிட்ரோடா கூறி உள்ளார்.இந்திரா காந்தி குடும்பத்தின் நீண்ட கால நண்பராக இருப்பவர் சாம் பிட்ரோடா. காங்கிரசின் அயல்நாடு பிரிவின் தலைவரான அவர், ராஜிவ்காந்தி ஆட்சியில் தொலைதொடர்பு துறையில் மிகப்பெரிய மாற்றத்திற்கு வித்திட்டவர். தற்போது ராகுலுக்கும் நெருக்கமானவராக இருந்து வரும் சாம் பிட்ரோடா, புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ‘‘பாகிஸ்தானின் பாலகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதல் குறித்த தகவல்களை அரசு வெளியிட வேண்டுமென்றும், எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக கூற வேண்டும் என்றார்.

இது கடும் சர்ச்சையானது. பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பாஜ தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘காங்கிரசின் அரச வம்சத்திற்கு ஆதரவானவர் தீவிரவாதத்திற்கு தக்க பதிலடி கொடுப்பதில் காங்கிரசுக்கு உடன்பாடு இல்லை என நாட்டு மக்களுக்கு தெரிந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்’’ என்றார். இந்நிலையில் இது குறித்து நேற்று பதிலளித்த சாம் பிட்ரோடா, ‘‘பிரதமர் கூறுவது போல, பாஜ கூறுவது போல, நமது பாதுகாப்பு படையினர் மீதோ அல்லது அரசு மீதோ நான் சந்தேகத்தை எழுப்பவில்லை. எல்லோரையும் போல கூடுதல் தகவல் வெளியிடுங்கள் என்றேன், அவ்வளவுதான். இதற்கு பிரதமர் வரையிலான எதிர்வினையை நான் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்த குழப்பம்... ஜனநாயக நாட்டில் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. விவாதம், ஆலோசனை, பேச்சுவார்த்தை, வெளியிடுதல் ஆகியவை நல்ல விஷயங்கள். ஆனால் பிரதமரே எதிர்க்கும்போது, உண்மையிலேயே கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா என்ற குழப்பம் எனக்குள்
ஏற்படுகிறது’’ என்றார்.

சந்தேகிப்பது துரதிஷ்டவசமானது
பாலகோட் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் குறித்து கேள்வி கேட்பதால், காங்கிரசை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பாஜ தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று அளித்த பேட்டியில், ‘‘இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் பற்றியோ, வான் வழி தாக்குதல் பற்றியோ எந்த நாடும் விமர்சிக்கவில்லை. பாகிஸ்தான் மட்டும்தான் சந்தேகம் கிளப்பியது. அதே பாணியில் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது துரதிஷ்டவசமானது. இது தேச உணர்வுகளையும் காயப்படுத்துகிறது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kang ,Pitroda ,attack , Balagot attack,congress Sam Pitroda
× RELATED சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்