×

மாறிமாறி காலை வாரிக்கொண்டிருக்கும் எடப்பாடி, டிடிவி அணிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா


‘‘அதிமுகவுக்கும் அமமுகவுக்கும் பல இடங்களில் மோதல் வரும் போலிருக்கிறதே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
 ‘‘நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளில் நெல்லை தொகுதியில் மட்டுமே அதிமுக போட்டியிடுகிறது. டிடிவி தினகரனின் அமமுக இந்த மாவட்டங்களில் பலமாக உள்ளதே இதற்கு காரணம். அவர்களுக்கு பயந்து தான் பல தொகுதிகளில் அதிமுக ஒதுங்கி விட்டு கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை தாரை வார்த்து விட்டது. இது ஒருபுறம் இருக்க இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் ஒன்றான விளாத்திகுளத்தில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து முன்னாள் அதிமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், சுயேச்சையாக களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுகவின் இரட்டை தலைமையை ஒரு பிடிபிடித்த மார்க்கண்டேயன், அதிமுக வேட்பாளர் எந்த வகையிலும் வெற்றி பெறக் கூடாது என கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்குகிறார். இது அதிமுகவினர் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. இன்னும் எத்தனை தொகுதிகளில் எத்தனை பேர் இப்படி களமிறங்கப் போகிறார்களோ? இருக்கும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை ஏற்கனவே ஒவ்வொன்றாக குறைந்து வரும் நிலையில் இந்த ஆட்சி எத்தனை நாள் நீடிக்குமோ என்ற கவலை அதிமுகவினரை இப்போதே தொற்றிக் கொண்டுள்ளது’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஓ..அப்படிப் போகுதா.. ஆனா சில இடங்களில் அமமுக ஓட்டை பிரிக்கும் பணியில் அதிமுக தீவிரம் காட்டுதாமே..’’
 ‘‘வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் மக்களவை தொகுதிகளுக்கும், ஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் ஆகிய சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கும் வேட்பாளர்களை களம் இறக்கி அதிமுகவின் ஒட்டை பிரிக்கும் பணியில் அமமுக கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதேநேரத்தில் கடந்த வாரம் வேலூரை சேர்ந்த அமமுக முக்கிய பிரமுகர்கள் அதிமுகவில் ஐக்கியமாயினர். அமமுக முகாமில் உள்ள மேலும் பல முக்கிய நிர்வாகிகளை வைட்டமின் ‘ப’வை காண்பித்து அதிமுகவுக்குள் இழுக்க உள்ளூர் அமைச்சர் தலைமையிலான குழு காய் நகர்த்தி வருகிறது. குறிப்பாக இடைத்தேர்தல் நடக்கும் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு வங்கியை கையில் வைத்திருக்கும் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களை குறி வைத்து அமைச்சர் தலைமையிலான குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் குறி வைத்தவர்களை இழுக்கும் முயற்சி தோல்வியிலேயே முடிந்துள்ளதாக அதிமுகவினர் மத்தியிலேயே தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது’’ என்றார் விக்கியானந்தா.
 ‘‘இரண்டு கட்சியும் மாறிமாறி காலைவாரிக்குதுனு சொல்லுங்க.. அதிருக்கட்டும் குமரி கலெக்டர் தேர்தல் பணிகளை காட்டிலும் ஆக்ரமிப்பு அகற்றும் பணிகளில்தான் அதிக ஆர்வம் காட்றாராமே..’’
 ‘‘நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சாலையோரம் உள்ள கொடிக்கம்பங்களில் இருந்து கொடிகளை முதலில் அகற்றினர். பின்னர் கொடிக்கம்பங்களை வாளால் அறுத்து எடுத்தனர். இப்போது எஞ்சியுள்ள கொடிமர பீடங்களையும் ஜேசிபி உதவியுடன் தகர்த்து எடுத்து செல்கின்றனர். என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் மூன்று நாட்களுக்கு பின்னர் இது சென்னை ஐகோர்ட் உத்தரவு, ஆக்ரமிப்பு அகற்றம் என்று கலெக்டர் அறிக்கை வெளியிட்டார். கூடவே முதலில் நாகர்கோவிலில் நடைபெற்ற பணிகளை இப்போது மாவட்டம் முழுவதும் தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டாத, அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை காண்பித்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கொடிமரங்களையும் அகற்றிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டம் என்று மாற்றப்பட்ட குமரி மாவட்டம் இனி அரசியல் கட்சிகள் கொடிக்கம்பங்கள் இல்லாத மாவட்டம் என்ற நிலைக்கும் செல்கிறது. ஆனால் தமிழகத்தில் வேறு எந்த பகுதியிலும் இதுபோன்ற சென்னை ஐகோர்ட் உத்தரவை காரணம்காட்டி கொடிமர பீடங்களையும் ஆக்ரமிப்பு என்று அகற்றியதாக தகவல் இல்லை என்பதுதான் வினோதம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பேரறிஞர் பெயரைக் கொண்ட பல்கலைக்கழக மண்டல அலுவலக பொறுப்பாளர்களுக்கு பணம் கொட்டோ ெகாட்டுன்னு கொட்டுதாமே அது என்ன விஷயம்’’ என்றார் பீட்டர் மாமா...
‘‘அதுஒன்னுமில்லை செமஸ்டர் தேர்வில் தனியார் கல்லூரிகளுக்கு ஸ்குவாடு செல்லும் பொறுப்பாளர்கள், தங்களுக்கு சொந்த காரை வாடகை நிறுவனம் ஒன்றின் பேரில் இயக்குகிறார்கள். அதனால் சம்பளம் போக ஸ்குவாடாக சென்ற அதிகாரிகளுக்கு கார் வாடகையாக பணம் கொட்டுதாம். இவர்கள் ஸ்குவாடாக சென்றதற்கு மட்டுமல்லாமல் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதற்கும் சேர்த்து ரசீது வைத்து கணக்கு காட்டி பணம் வாங்குகிறார்களாம். அதைத்தான் பணம் கொட்டுதுன்னு விஷயம் தெரிஞ்சவங்க பேசிக்கிறாங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு காரை ஒப்படைக்காம இருக்காராமே அதிமுக நிர்வாகி..’’
‘‘விருதுநகர் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில், திருச்சுழி அருகே பூழாங்கல் கிராமத்தை சேர்ந்த அதிமுக சிறுபான்மை அணியின் மாநில நிர்வாகி ஒருவர் தலைவராக இருந்தாரு... இவரது தலைவர் பதவி கடந்த ஆக. 23ம் தேதியே முடிஞ்சுருச்சாம்... ஆனால், அவர் அச்சகத்தில் தலைவராக இருந்தபோது, அச்சக கணக்கில் புதிதாக கார் வாங்கி பயன்படுத்தி வந்தாராம்... பதவி முடிந்து 8 மாதமாகியும் அச்சகத்திற்கு சொந்தமான காரையும், டிரைவரையும் இப்ப வரை திருப்பி அனுப்பலையாம்... காருக்கான டீசலும், டிரைவருக்கான சம்பளமும் அச்சகத்திலிருந்து மாதந்தோறும் வழங்கப்படுகிறதாம். தற்போது மக்களவைத் தேர்தல் நடைமுறையில் இருக்கும்போதும், அரசு விதிமுறைகளை மீறி வாகனத்தை ஒப்படைக்காமல் சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறாராம்... இதற்கு அச்சக மேலாண்மை இயக்குநரும் உடந்தையாக இருக்கிறாராம்... மண்டல இணைப்பதிவாளரும் தன் பங்கிற்கு தெரிந்தும் தெரியாமல் இருப்பதாக, கார்களை ஒப்படைத்த முன்னாள் அதிமுக நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரத்தில் பரவலாக பேசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Edappadi ,DTV teams , peter mama
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...