×

சென்னை மாவட்ட தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய, மாநில அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவு

சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று  மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் (இடைத்தேர்தல்) நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, மத்திய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து 20,271 தேர்தல் பணி அலுவலர்களாக தேர்வு செய்து அவர்களுக்கு தேர்தல் பணிக்கான நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அலுவலர்களுக்கும் அவர்களது பணி நியமனம் குறித்து குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நாளை மற்றும் ஏப்ரல் 7, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் பணி நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பயிற்சி நடைபெறும் வகுப்புகளுக்கு மேற்கூறிய நாட்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளும் அலுவலர்கள் அனைவருக்கும் அவர்களது விவரங்கள் அடங்கிய தகவல் குறிப்பு படிவம் வழங்கப்படும். அதில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்று சரிபார்த்து விடுபட்ட விவரங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

இந்தப் படிவங்கள் நாளை பயிற்சி மையங்களிலேயே வழங்கப்படும். புகைப்படம் ஒட்டத்தவறிய அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் அந்தந்தப் பயிற்சி மையங்களில் வெப்கேமரா மூலம் புகைப்படங்கள் எடுப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தபால் வாக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் பயிற்சி கையேடுகள் இவ்வகுப்புகளில் வழங்கப்படும். அலுவலர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் நகலினை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். இந்தப் பயிற்சி வகுப்புகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.  பயிற்சியில் கலந்து கொள்ளும் அலுவலர்களுக்கு உதவிடும் வகையில் 16 மருத்துவக் குழுக்கள் அந்தந்தப் பயிற்சி மையங்களில் பணியாற்றவுள்ளனர்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒழுங்கு நடவடிக்கை
பயிற்சியில் கலந்து கொள்ளத்  தவறுபவர்களுக்கு தேர்தல் விதிகளின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்  1951-ன் கீழும் தேர்தல் ஆணையத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.   அவ்வாறு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால்  மட்டுமே இறுதி ஆணை பிறப்பிக்க இயலும்.  இதுதொடர்பாக அவர்களது  பணிப்பதிவேடுகளிலும் பதிவு மேற்கொள்ளப்படும். எனவே, அனைவரும் மேற்கண்ட  பயிற்சி வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும், எனவும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central ,State Officers ,District Election Officer ,Chennai District Election Regions , Chennai District Election Regions , District Election Officer
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது