×

1,398 கிரிமினல் வேட்பாளர்களுக்கு சிக்கல்; குற்றவழக்கு விபரங்களை டிவி, நாளிதழில் வெளியிட உத்தரவு

புதுடெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது குற்றவழக்கு விபரங்களை டிவி, நாளிதழில் வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 1,398 கிரிமனல் வேட்பாளர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்கள், மீண்டும் போட்டியிட ‘செக்’ வைத்ததுள்ளதால், பொதுவெளியில் விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், குற்ற வழக்கு ஏதும் இல்லையென்றாலும் விளம்பரப்படுத்த ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த தேர்தலில் பல புதிய முயற்சிகளை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

அதன்படி, வேட்புமனுவில் வேட்பாளர்கள் தங்களது வெளிநாட்டு சொத்துவிபரங்கள் மற்றும் ஐந்தாண்டு வருமான வரிக்கணக்கு ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும் என்று விதிகளை மாற்றியது. மேலும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நடைமுறை கடந்த டிசம்பரில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முதல் அமல்படுத்தப்பட்டு வரும்நிலையில், வருகிற மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் முதல் முறையாக அமலுக்கு வருகிறது. அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விவரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும்.

குற்ற நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் என்றால், அது குறித்த தகவல்களையும் அந்த வேட்பாளர் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதைப்போல தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித்தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும். அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
முன்னதாக, பாஜவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வானி குமார் உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றால் அவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்குகளை விசாரணை செய்து தீர்ப்பு வழங்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘எம்.பி, எல்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். அந்த வழக்குகளை ஒரு ஆண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 1,158 வேட்பாளர்கள் குற்றப்பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். அதே 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் 1,398 ேவட்பாளர்கள் குற்ற வழக்கில் தொடர்புடைய நிலையில் தேர்தலில் போட்டியிட்டனர்.
 
இவர்கள் இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால், அவர்கள் பொதுவெளியில் தங்களது குற்றவிபரங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேர்தல் கமிஷனின் இந்த புதிய நடவடிக்கையால், வாக்காளர்கள் மத்தியில் குற்றவழக்கில் தொடர்புடைய வேட்பாளர்கள் மீதான மதிப்பு அம்பலத்துக்கு வரவாய்ப்புள்ளது. இதுகுறித்து, கூடுதல் முதன்மை தேர்தல் அதிகாரி வினய் குமார் சவுவ்பே கூறுகையில், ‘‘வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்த பின், தங்கள் மீதான குற்றவழக்கு விபரங்களை நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்த வேண்டும். அவை, வாக்குப்பதிவுக்கு முன்னதாக 2 நாட்களுக்கு முன் வெளியிட வேண்டும். குற்ற வழக்குகள் ஏதும் இல்லாது இருந்தாலும், விளம்பரப்படுத்த வேண்டும். இதற்காக மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018, அக்டோபர் 10ம் தேதி 5 மாநில சட்டசபையில் இருந்தே இந்த புதிய உத்தரவை ேதர்தல் ஆணையம் நடைமுறை படுத்தி வருகிறது’’ என்றார்.

சிறப்பு நீதிமன்றங்கள்

உச்சநீதிமன்ற உத்தரவை  தொடர்ந்து, நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட 12 இடங்களில் சிறப்பு  நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு கீழமை நீதிமன்றங்களில் முன்னாள் மற்றும்  இந்நாள் எம்பி, எம்எல்ஏக்கள் மீது நிலுவையில் இருந்த 1,581 வழக்குகள் இந்த  சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன. இந்த நீதிமன்றங்களில் வழக்கு  விசாரணை தினந்தோறும் என்ற அடிப்படையில் நடந்து வருகிறது. தற்போது மக்களவை  மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல் நடப்பதால், ஏற்கனவே எம்பி, எம்எல்ஏக்களாக உள்ளவர்கள், புதியதாக போட்டியிடக்கூடியவர்கள், தங்களது குற்ற வழக்குகள் குறித்த விபரங்களை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி  உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : newspaper , 2019 parliamentary election, Lok Sabha election 2019, candidates, crimes and advertisements
× RELATED கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு...