×

சொன்னபடி கேளு... மக்கர் பண்ணாதே..!

ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11 முதல் 29ம் தேதி வரை சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நான்கு கட்டங்களாக நடக்கிறது. வேட்பாளர் தேர்வை சுமுகமாக முடித்தாலே போதும் என்கிற நிலைக்கு வந்து விட்டாராம் முதல்வரும், பிஜேடி கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதும், கட்சி நிர்வாகிகள் ஆளாளுக்கு சண்டை பிடிக்கிறார்கள். உருவ பொம்மை கொளுத்துகிறார்கள். உச்சகட்டமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து, சுயேச்சையாகவும் நாமினேஷன் கட்டி, மல்லுக்கு வருகிறார்கள். பாத் மாவட்டம், கந்தமால் பேரவை தொகுதிக்கு, சிட்டிங் எம்எல்ஏ மகிதர் ராணாவுக்கு மீண்டும் சீட்டு வழங்கினார் நவீன். இங்குதான் வெடித்தது பிரச்னை. ‘‘அந்தாள் ஒரு கரப்ஷன் பேர்வழி. அவரைப் பத்தி பல தடவை புகார் கொடுத்திருக்கிறோம். அவருக்கே திரும்பவும் சீட்டுனா எப்புடி... கட்சியில உழைச்சதுக்கு அப்புறம் என்னங்க மரியாதை...?’’ என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பி விட்டார் பிஜேடி தொகுதி நிர்வாகி சங்கர்சன் பிரதான்.

கஜபதி மாவட்டம், மோகனா பேரவைத் தொகுதிக்கு இம்முறை சிட்டிங் எம்எல்ஏ பஸந்தி மாலிக், அந்தர்யாமி கமாங்க், அம்ஷன் மாலிக் ஆகியோர் சீட்டு கேட்டிருந்தனர். இவர்களில் யாருக்குக் கொடுத்தாலும், மற்ற இருவர் மண்டை காய வைத்து விடுவார்கள் என்று கருதிய கட்சித்தலைமை, மூன்று பேரையும் ஒதுக்கிவிட்டு பர்னபாசி நாயக் என்ற நிர்வாகிக்கு சீட் கொடுத்தது. உள்ளூர் நிர்வாகிகள் வெகுண்டெழுந்து விட்டனர். சுயேச்சையாக அம்ஷன் மாலிக்கை மனுத்தாக்கல் செய்யச் சொல்லி விட்டு, அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக அனலடிக்கும் பிரசாரம் செய்கிறார்கள். பிரம்மகிரி தொகுதியிலும் இந்தக் கூத்துதான். பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருப்பதால், இறங்கி வந்திருக்கிறது தலைமை. ‘‘பிஜேடியில் ஒருவருக்கு மட்டும் தானே சீட்டு கொடுக்க முடியும். இதை அதிருப்தியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இம்சையைக் கொடுக்காமல், கட்சிக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும்...’’ என்று கூறியிருக்கிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Odisha State
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...