×

கேரளாவில் பதவியை துறந்து தேர்தலில் போட்டியிட தயாராகும் டி.ஜி.பி.

திருவனந்தபுரம்: கேரளாவில் தற்போது சஸ்பெண்டில் உள்ள ஐ.பி.எஸ். அதிகாரியான ஜேக்கப் தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார். கேரள போலீசில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி.யாக இருந்தவர் ஜேக்கப் தாமஸ். 1985 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் அடிக்கடி கேரள அரசை விமர்சித்து வந்தார். கடந்த 2017ல் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராக இருந்தபோது ஓகி புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரள அரசு முறையான நிவாரண உதவிகளை செய்யவில்லை என்று கூறினார். இதையடுத்து அரசுப் பணியில் இருந்து கொண்டு அரசை விமர்சித்ததாக கூறி அவரை 6 மாதம் சஸ்பெண்ட் செய்ய முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார். இதன் பின்னர் ஜேக்கப் தாமஸ் தனது பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதில் கேரள அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதை தொடர்ந்து அரசின் முன் அனுமதி பெறாமல் புத்தகம் எழுதியதாக கூறி மேலும் 6 மாதங்கள் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதன் பிறகு ஜேக்கப் தாமஸ் துறைமுக இயக்குனராக இருந்தபோது சில பொருட்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக கூறி மேலும் 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ் சஸ்பெண்டிலேயே இருந்து வருகிறார். இவர் ஓய்வு பெற இன்னும் ஒன்றரை வருடங்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சூரில் டுவென்டி டுவென்ட்டி என்ற சமூக நல அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் இம்மாவட்டத்திலுள்ள கிழக்கம்பலம் என்ற பஞ்சாயத்தை நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் இந்த அமைப்பின் சார்பில் ஜேக்கப் தாமஸ் சாலக்குடி தொகுதியில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DGP ,Kerala , DGP ready to quit,post in Kerala
× RELATED அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு...