×

தூத்துக்குடியில் வழக்கறிஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு

மதுரை : தூத்துக்குடியில் வழக்கறிஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி தற்போது அபாயகரமான பகுதியாக உள்ளது என்று உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கை என்ஐஏ-க்கு மாற்றக் கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வழக்கு கடந்து வந்த பாதை

மதுரை நாகனாகுளத்தை சேர்ந்த கார்மேகம் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் சட்டவிரோத கள்ளத்துப்பாக்கி விற்பனை அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்துப்பாக்கி விற்பனை செய்ததாக சென்னை, திருச்சியில் ஒரு காவலர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடமாநிலங்களிலேயே கள்ளத்துப்பாக்கி வழக்கம் அதிகமிருந்த நிலையில், சமீபகாலமாக தமிழகத்திலும் அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இதுபோன்ற நிகழ்வுகள் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் அச்சத்தை விளைவிக்கும் வகையில் உள்ளன. எனவே, இவற்றை முடிவுக்கு கொண்டு வர சட்டவிரோத, உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கு விசாரணையை  தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றவும், அதுகுறித்து குறிப்பிட்டகால இடைவெளியில் அவர்கள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் சரமாரி கேள்வி

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், ராமதிலகம் ஆகியோர் விசாரித்து, “தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சட்டவிரோத ஆயுதங்கள் பயன்படுத்தியதாக எத்தனை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன? அது தொடர்பாக எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?  அவர்கள் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது?  இதுபோன்ற சட்டவிரோத ஆயுத விவகாரங்களில் காவல்துறையினருக்கும் தொடர்புள்ளதாக தெரியவருகிறது. தூத்துக்குடியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அதிகாரியிடமிருந்து 9 அமெரிக்க வகை துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. அந்த வழக்கின் நிலை என்ன? அந்த வழக்கின் அறிக்கையை தூத்துக்குடி எஸ்பி தாக்கல் செய்ய வேண்டும். சட்டவிரோத ஆயுத வழக்குகளை, தேசிய புலனாய்வு முகமை தாமாக வந்து விசாரிக்கும் பொறுப்பை முறையாக செயல்படுத்துகிறதா? இந்தியா முழுவதும் சட்டவிரோத ஆயுதம் தொடர்பாக மாநில வாரியாக எவ்வளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன?  சட்டவிரோத ஆயுதம் தொடர்பான அந்த மாநிலங்களின் வரம்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தேசிய புலனாய்வு முகமை பதிலளிக்க உத்தரவு


இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2008ல் தூத்துக்குடியில் வழக்கறிஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8 அமெரிக்க வகை துப்பாக்கிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஏப்ரல் 4ம் தேதி சமர்ப்பிக்க தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டது. மேலும் துப்பாக்கிகள், தோட்டாக்கள், குற்றப்பத்திரிக்கையை சமர்ப்பிக்கவும் மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.

துப்பாக்கிகள், ஆவணங்களை சமர்ப்பிக்க வரும்போது ஆயுதப்படை டிஎஸ்பி தலைமையில் பாதுகாப்பு தர ஆணையிட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடி தற்போது அபாயகரமான பகுதியாக உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் உரிமம் இல்லாத கள்ளத்துப்பாக்கி விற்பனை தொடர்பான வழக்கை என்ஐஏ-க்கு மாற்றக் கோரியது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய புலனாய்வு முகமை, ஏப். 4-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,attorney ,Tuticorin , National Intelligence Agency, Scouting, Sales, Thoothukudi
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!