×

கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது : தேர்தல் ஆணையம்

சென்னை : கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற தேர்தல் ஆணைய சட்டத்தில் இடமில்லை என்றும் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் என்பதால் கிறிஸ்துவ பள்ளி வாக்குச் சாவடிகளை மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

கிறிஸ்துவ பள்ளி வாக்குச் சாவடிகளை மாற்றக் கோரி வழக்கு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளிக்கு முந்தைய நாளில் பெரிய வியாழன் பண்டிகை கொண்டாடப்படுவதால், தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் அல்லது கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளை வேறு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பெரிய வியாழன், புனித வெள்ளி, ஈஸ்டர் போன்ற பண்டிகைகளுடன் அந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கப்படுவதாகவும், கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கும் போது, தேர்தல் ஆணையம் அப்பள்ளிகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதால், வழிபாடு செய்யமுடியாத நிலை ஏற்படும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய சட்டத்தில் இடம் இல்லை

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது வாக்குபதிவு நாளில் கிறிஸ்துவர்களின் பெரிய வியாழன் பண்டிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கிறிஸ்தவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக கூறியது.  மேலும் கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்படும் வாக்குச்சாவடிகளை மாற்ற தேர்தல் ஆணைய சட்டத்தில் இடம் இல்லை என்றும் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர தயாராக உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும் கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள தேவலாயங்களுக்கு சுதந்திரமாக சென்று வர நடவடிக்கைகளை மேற்கொள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் எந்த காரணத்திற்காகவும்  வாக்குச்சாவடிகளை மாற்ற இயலாது என்றும் தேர்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்பட உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Voting booths ,schools ,Christian ,Election Commission , Christian schools, high court, election commission
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...