×

பெரியதாழையில் மீண்டும் கடல் சீற்றம் : மீன்வலைக்கூடம் இடிந்து விழுந்தது

சாத்தான்குளம்: பெரியதாழை கடலில் நேற்று மீண்டும் கடல் சீற்றம் ஏற்பட்டதில் மீன் வலைக்கூடம்  இடிந்து விழுந்தது. கடற்கரையில் மணல் அரிப்பால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ. 25 கோடி மதிப்பில் இரு தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. அதில் கிழக்கு பகுதியில் 200 மீட்டர் தொலைவிலும், மேற்கு பகுதியில் 800 மீட்டர் தொலைவிலும் அமைக்கப்பட்டது. அதில் குறைவாக அமைக்கப்பட்ட பகுதியில் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து கூடுதலாக தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில் தூண்டில் வளைவை நீட்டிக்கவும், மீன் பிடி இறங்குதளம் அமைக்கவும் ரூ.54 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்து தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் நிதி ஒதுக்கப்படாமல் உள்ளது. இதனால் பெரியதாழையில் அடிக்கடி கடல் சீற்றம் உண்டாகி கரையில் மணல் அரிப்பு ஏற்பட்டும், சுற்றுச்சுவர் உடைந்து கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகும் நிலை உள்ளதாக மீனவர்கள் மாவட்ட  கலெக்டர் மற்றும் தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பினர். அதன்பேரில் பெரியதாழை கடற்கரையில் தற்காலிகமாக கடல் அரிப்பு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகளை கொண்டு தடுப்பதுடன், கடற்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க மாவட்ட கலெக்டர் நிதியில் ரூ.1 கோடியே 17 லட்சம் ஒதுக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் நேற்று பெரியதாழையில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்பட்டது. இதில்  மணல் அரிக்கப்பட்டு கரையில் நிறுத்தியிருந்த படகுகள் கடலில் இழுத்து செல்லப்பட்டன. இதையடுத்து மீனவர்கள் படகை கரைக்கு இழுத்து வந்தனர். மேலும் கடற்கரையில் இருந்த மீன்வலைக்கூடம் திடீரென இடிந்து விழுந்தது. மேலும் கடல் சீற்றம் உண்டானால் கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகும் நிலை ஏற்பட்டுள்ளது என மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மீனவர்கள் கூட்டமைப்பினர், மாவட்ட கலெக்டருக்கு கடல் அரிப்பால் ஏற்பட்ட பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அனுப்பியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : periyathalai, ocean, minvalaikkutam
× RELATED சென்னை தியாகராயர் நகரில் ஆட்டோ மீது...