புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பாரம்பரிய ரக மீன்களை அழிக்கும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயத்திற்கு அடுத்த பிரதான தொழிலாக உள்நாட்டு மீன்வளர்ப்பு உள்ளது. உள்நாட்டு மீன் வளர்ப்பில் இந்திய பெருங்கெண்டை மீன் வகைகளான கட்லா, ரோகு, மிர்கால் மற்றும் சீனப் பெருங்கெண்டை மீன் வகைகளான வெள்ளிக்கெண்டை, புல் கெண்டை, சாதாக்கெண்டை மேலும் மரபியல் மேம்படுத்தப்பட்ட வளர்ப்பு திலேப்பியா மற்றும் கொடுவா மீன் குஞ்சுகளை தேர்வு செய்து விவசாயிகள் மீன்வளர்ப்பு பணி மேற்கொண்டு உரிய வருவாயினை ஈட்டி வருகின்றனர்.
ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் வளர்ப்பது மற்றும் விற்பனை செய்வது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இம்மீன் இனங்கள் மற்ற மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை அதிதீவிரமாக இரையாக உண்ணும் தன்மை உடையதால் நமது பாரம்பரிய மீன்கள் மற்றும் வளர்ப்பு மீன்களையும் அவற்றின் முட்டைகளையும் முற்றிலுமாக அழித்துவிடும். ஆகையினால் நமது நீர்நிலைகளில் உள்ள அனைத்து பாரம்பரிய நீர்வாழ் உயிரினங்களும் அழியும் வாய்ப்புள்ளது. மேலும் இம்மீன் இனங்கள் காற்றில் உள்ள பிராண வாயுவினை சுவாசிக்கும் தன்மையும் மற்றும் மிக குறைந்த ஆழமுள்ள நீர்நிலைகளிலும் இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடையது. இம்மீன்கள் பாரம்பரிய உள்நாட்டு கெளுத்தி மீன்களுடன் இனப்பெருக்கம் மேற்கொண்டு அவற்றின் மரபியலை சிதைத்து ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்கள் பல்பெருக்கமடைய வல்லமையுடையது.
மேலும் மழை மற்றும் பெரு வெள்ள காலங்களில் இம்மீன் இனங்கள் வளர்ப்பு செய்யும் குளங்களில் இருந்து தப்பி வெளியேற வாய்ப்பு உள்ளதாலும், தப்பித்து செல்லும் மீன்கள் உள்நாட்டு நீர்நிலைகளில் மற்ற பாரம்பரிய மீன்களை முற்றிலும் அழித்து பல்பெருக்கமடைந்து ஒரு காலகட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை தவிர பிற மீன்கள் இல்லாமல் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். எனவே தடை செய்யப்பட்டுள்ள ஆப்பிரிக்க ரக கெளுத்தி மீன்களை வளர்ப்பு செய்வது மற்றும் விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் ஏதேனும் பெறப்படின் அம்மீன்களை முற்றிலும் அழித்திட வேண்டி அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இதன் வாயிலாக எச்சரிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்களும் இவ்வகை மீன்களை கொள்முதல் செய்திட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
