×

தேர்தல் பிரசாரத்திற்கு விஜயகாந்த் மேடை ஏற டாக்டர்கள் தடை: மகன்களை களம் இறக்க தேமுதிக திட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து, அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்பாளர் பட்டியலையும் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதையடுத்து தேமுதிகவினரும் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று சென்னை திரும்பியுள்ளார். அவரை அனைத்து கட்சி தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய விஜயகாந்த் வருவாரா என்ற எதிர்பார்ப்பு கூட்டணி கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, தேமுதிக நடத்தும் பொதுக்கூட்ட மேடைக்கு அழைத்து வந்து பிரசாரம் செய்யலாம் என்றும், அவரை பேச வைக்காமல் பிரசாரத்தை மேற்கொள்ளலாம் என்றும் தேமுதிக தலைமை திட்டமிட்டது. ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், தற்போது அவருக்கு ஓய்வு தேவை. அவரை பிரசார மேடைக்கு அழைத்து சென்றால் சிகிச்சையில் பின்னடைவு ஏற்படலாம் என்று அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.  இதனால், விஜயகாந்தை பிரசார மேடைக்கு அழைத்து வரும் முடிவை தேமுதிக கைவிட்டு விட்டதாக பேசப்படுகிறது. அவருக்கு பதிலாக பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
மேலும் விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே.சுதீஷ் தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் முழுவதும் அவரால் பிரசாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், நடிகரான சண்முக பாண்டியன் ஆகிய இருவரையும் பிரசாரத்தில் இறக்க தேமுதிக திட்டமிட்டுள்ளது.

 ஏற்கனவே விஜய பிரபாகரன் கூட்டணி இழுபறியின்போது மற்ற கட்சியினர் குறித்து தொண்டர்கள் மத்தியில் விமர்சனம் செய்தது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அரசியல் வட்டாரத்தில் விஜய பிரபாகரன் பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் மகன்கள் இருவரையும் பிரசாரத்தில் இறக்கவும், அதற்கான சுற்றுப்பயணம் குறித்து பட்டியல் தயார் செய்து வருவதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விஜயகாந்தை பிரசாரத்திற்கு வரவேண்டாம், உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் என அவரை சந்தித்த அரசியல் கட்சி தலைவர்களும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijayakanth ,doctors , Election campaign, Vijayakanth, sons, dhamtika project
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...