×

என்னிடம் பொறுப்பை கொடுங்க 40க்கு பெட்ரோல் தாரேன்..டி.ஆர்.பாலு சவால்

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் பெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலு பேசியதாவது : 125 கோடி மக்கள் இந்தியாவில் இருக்கின்றோம். இந்த 125 கோடி மக்களும் தெரிந்தோ, தெரியாமலோ மோடியிடம் ஏமாந்துகொண்டிருக்கின்றோம். எப்படி என்றால் ஒவ்வொருத்தரும் பைக் மற்றும் கார்களுக்கு பெட்ரோல் போடுகின்றோம். டீசல் போடுகின்றோம். இதற்கு எல்லாம் தினம்தோறும் அநியாயமாக வரிகளை நாம் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். ஒரு லிட்டர் பெட்ரோல் 74-75 ரூபாய். இது நியாயமான விலை கிடையாது. காரணம் நான் 1996ல் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தேன். இன்றைக்கு என்னிடம் பொறுப்பை கொடுங்கள்.

நான் நாளை காலைக்குள் 40 ரூபாயாக பெட்ரோல் விலையை மாற்றிக்காட்டுகின்றேன். மோடி எங்கெங்கேயோ சென்று சவால் விடுகின்றார். நான் சவால் விடுகின்றேன் 40 ரூபாய்க்கு நான் பெட்ரோல் கொடுக்கின்றேன்.
அப்படி செய்தால் பாஜ கட்சியினர் யாரும் தேர்தலில் நிற்கக்கூடாது. பாஜவினரால் அது முடியுமா. பெட்ரோல் விலையை அது சம்மந்தப்பட்ட மந்திரி, அரசாங்கம், பிரதமர் ஆகியவர்கள் தான் நிர்ணயம் செய்யவேண்டும். ஆனால் இந்த விலையை தற்போது சம்மந்தப்பட்ட நிறுவனம்தான் நிர்ணயிக்கின்றது. அப்படி நிறுவனமே விலையை நிர்ணயித்தால் அது பொதுமக்களுக்கு சாதகமாக இருக்காமல் அவர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். எனவே இதுபோன்ற நிறுவனங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : t.R. , பெட்ரோல் ,டி.ஆர்.பாலு
× RELATED நாட்டிலேயே 2ஆவது மிகப்பெரிய...