×

அது அந்தக்காலம்: கை பிறந்த கதை

தமாகா கேட்டதும் சைக்கிள் சின்னம். புதிய கட்சியான மக்கள் நீதி மையம் போட்டியிடும் எல்லா தொகுதிகளிலும் ‘டார்ச் லைட்’ சின்னம்.  ஆனால் விசிக  மோதிரத்துக்கும், நட்சத்திரத்துக்கும் முட்டி மோதிக் கொண்டிருக்கிறது. அமமுக குக்கர் சின்னத்துக்காக நீதிமன்றம் வரை போராடியும்  கடைசிவரை  குக்கர் விசில் அடிக்கவேயில்லை. சின்னத்துக்கு ஏன் இத்தனை மெனக்கெடல்…. தெரிந்த சின்னமாக இருந்தால், ஏற்கவே பயன்பாட்டில் இருந்தால்  நன்றாக இருக்கும் என்பது அரசியல் கட்சிகளின் போராட்டம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை இந்த சின்னங்களால் அம்பலப்பட்டு கிடக்கிறது.இருந்த சின்னத்தை தக்க வைத்துக் கொள்ள மட்டுமல்ல, புதிய சின்னத்தை தேர்வு செய்யவும் அரசியல் கட்சிகள் ‘ரூம்’ போட்டு யோசிக்கும். சின்னம் எளிதாக மனதில் பதியும் வகையிலும், மக்களுக்கு தெரிந்ததாகவும், மதிக்கும் வகையிலும்,  முக்கியமாக எளிதில் வரையும் வகையிலும் இருக்க வேண்டும் என்பதுதான் காரணங்கள். அதனால்தான் அரசியல் கட்சியின் சின்னங்கள் எளிய பொருட்களாகவே இருப்பதை பார்க்கலாம்.

முதல் பொதுத் தேர்தலில் காங்கிரசின் சின்னம் இரட்டை காளை மாடுகள். அதுதான் 1952, 1957, 1962, 1967 என 4 தேர்தல்களில் காங்கிரசின் சின்னமாக இருந்தது.  ஆனால் 1969ல் காங்கிரஸ்  ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று பிரிந்தது. இரண்டு தரப்பும் காளைகளுக்கு மல்லுக் கட்டின.  அதனால் யாருக்கும் அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை.அதனால் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ’பசு கன்று’ சின்னத்தை தேர்வு செய்தனர். அந்த சின்னத்துக்கும் ஆயுள் நீடிக்கவில்லை.  எமர்ஜென்சி. அதன் பலனாய் 1977ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதனால் பசு கன்று சின்னத்தை மாற்றிவிடலாம் என்று கட்சிக்குள் பேச்சு எழுந்தது. அப்போது கட்சியில் அதிக செல்வாக்கோடு இருந்த சஞ்சய் காந்தி.  சின்னத்தை தாய், மகனுடன் ஒப்பிட்டு விமர்சனங்கள் எழுந்ததும் இன்னொரு காரணம். அதனால் கட்டாயம் சின்னத்தை மாற்றிவிட முடிவு செய்யப்பட்டது

அதனால் 1980 தேர்தலில் சின்னத்தை மாற்ற தேர்தல் ஆணையத்தை அணுகியது காங்கிரஸ். அப்போது தேர்தல் ஆணையத்தில் பிராக்(கவுன்), கேக், நகவெட்டி, கை, யானை ஆகிய சின்னங்கள் தேர்வு செய்யும் வாய்ப்பில் இருந்தன. இதற்கான பணிகளை மூத்த தலைவர் பூட்டாசிங் மேற்கொண்டிருந்தார். கையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தவர் அவர்தான். அப்போது இந்திராகாந்தி ஆந்திராவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரை தொலைபேசியில் தொடர்புக் கொண்டு ‘ஹாத்(கை)’யை தேர்வு செய்திருப்பதாக கூறியுள்ளார் பூடாசிங். இந்திராவுக்கு ‘ஹாத்தி(யானை)’ என்று கேட்டிருக்கிறது. அவர் யானை வேண்டாம் கை தான் வேண்டும் என்று கூறியுள்ளார். இருவருக்கும் சரியாக கேட்காததால் இடையில் பேசிய நரசிம்மாராவ்  சட்டென கை கொடுக்க  ‘கை’ தான் என இருவருக்கும் உறுதி செய்தார்.  கை தேர்ந்தெடுத்த பிறகும் பிரச்னை. காரணம் நாட்டின் முதல் தேர்தலில் அகில இந்திய ஃபார்வேர்டு பிளாக்(ரூய்கர் அணி) பயன்படுத்திய ‘கை’ அது.  அதனால் யோசித்தனர். அந்த சின்னத்தில் இருந்த  கையின் விரல்கள் பிரிந்து காணப்பட்டன.  அதனால் காங்கிரஸ் கையில் விரல்கள் ஒட்டியபடி வைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த கை தான் கடந்த 39 ஆண்டுகளாக  காங்கிரஸ் கட்சியின் நம்பிக்‘கை’ சின்னமாக இருக்கிறது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hand story
× RELATED வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தேனா? அண்ணாமலை பேட்டி