×

கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜ அரசு வெற்றி பெற்றது: 20 எம்எல்ஏக்கள் ஆதரவு

பனாஜி: கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 20 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜ அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய புற்றுநோயால் இறந்ததைத் தொடர்ந்து, புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் கடந்த 18ம் தேதி நள்ளிரவில் பதவியேற்றார். பதவியேற்ற 24 மணி நேரத்தில், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவர் ஆளுநரிடம் அனுமதி கோரினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் மிருதுளா சின்கா நேற்று சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்டினார். இதில், பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜ அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில், பாஜ எம்எல்ஏக்கள் 11 பேரும், கூட்டணி கட்சிகளான கோவா முன்னணி, சுயேச்சைகள், எம்ஜிபி ஆகியவற்றின் தலா 3 எம்எல்ஏகள் உட்பட 20 எம்எல்ஏக்கள் பாஜ அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 சபாநாயகர் பொறுப்பில் இருந்த பாஜ எம்எல்ஏ வாக்களிக்கவில்லை. காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் 14 பேர் மற்றும் அதன் கூட்டணியான தேசியவாத காங்கிரசின் ஒரு எம்எல்ஏ எதிர்த்து வாக்களித்தனர். இதன் மூலம், 20 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பிரமோத் சாவந்த் அரசு பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, மறைந்த முதல்வர் பாரிக்கர் மற்றும் பாஜ எம்எல்ஏ பிரான்சிஸ் டிசோசா, முன்னாள் துணை சபாநாயகர் விஷ்ணு வாக் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BJP ,legislature ,Goa , Goa legislature, the BJP government, 20 MLAs
× RELATED கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பாஜக பிரமுகர் கைது: ரூ.81,000 பறிமுதல்