×

பிரியங்காவுக்கு பிரதமர் மோடி பதிலடி அனைத்து அரசு அமைப்பையும் அவமானப்படுத்தியது காங்கிரஸ் தான்

புதுடெல்லி: ‘‘காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்தபோது, நாடாளுமன்றம், மீடியா, நீதி, பாதுகாப்பு துறை என அனைத்து அரசு அமைப்புகளையும் அவமானப்படுத்தியது. மக்கள் அதை எண்ணிப்பார்த்து வாக்களிக்க வேண்டும்’’ என பிரதமர் நரேந்திர மோடி தனது இணையதள பிரசாரத்தில் வலியுறுத்தி உள்ளார்.மத்தியில் பாஜ ஆட்சியில் கடந்த 5 ஆண்டில் அரசு அமைப்புகள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் மோடி, இணையதளத்தில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவது:எப்போதெல்லாம் குடும்ப அரசியல் அதிகாரத்திற்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அரசு அமைப்புகள் கடுமையான தாக்குதலை சந்தித்திருப்பதை இந்த நாடு கண்கூடாக பார்த்திருக்கிறது. பேச்சு சுதந்திரம், துடிப்பான பத்திரிகைகள் இருப்பதை குடும்ப கட்சிகள் விரும்பவில்லை. காங்கிரஸ் அரசு கொண்டு வந்த முதல் அரசியலமைப்பு சட்ட திருத்தமே, பேச்சு சுதந்திரத்தை தடுத்ததுதான்.

குடும்ப நலனை காக்க, பாதுகாப்பு கவசமாக கொண்டு வரப்பட்டதுதான் நெருக்கடி நிலை. காங்கிரஸ் 100க்கும் மேற்பட்ட முறை சட்டப்பிரிவு 356ஐ பயன்படுத்தி இருக்கிறது. அதில் இந்திரா காந்தி மட்டுமே 50 முறை பயன்படுத்தி இருக்கிறார். மாநில அரசையோ, அதன் தலைவரையோ அவர்கள் விரும்பாவிட்டால் உடனே ஆட்சியை கலைத்து விடுவார்கள். அதேபோல, அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால், உடனே அதை நிராகரித்து சம்மந்தப்பட்ட நீதிபதிக்கு எதிராக தகுதிநீக்கத் தீர்மானத்தை கொண்டு வருவார்கள். மன்மோகன் சிங் தலைமையிலான திட்டக்கமிஷனை ஜோக்கர்கள் கூட்டம் என முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியே கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலையொட்டி, எதிர்க்கட்சிகள் மற்றும் அதன் தலைவர்கள் மீது சிபிஐயை ஏவியிருக்கிறது காங்கிரஸ். மத்திய அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவு நகலை பத்திரிகையாளர்கள் சந்திப்பில், எந்த அமைச்சகத்திலும் உறுப்பினராக இல்லாத ஒருவர் சுக்கு நூறாக கிழித்து எறிந்திருக்கிறார்.

ராணுவ துறையை பணம் சம்பாதிக்கும் துறையாக மட்டுமே பார்த்தார்கள். 1947 முதல் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ராணுவ ஊழல்கள் நடந்துள்ளன. ஜீப் முதல் துப்பாக்கிகள் வரை எந்த ஆயுதத்தையும் வாங்கினாலும் அதில் ஊழல் நடந்திருக்கிறது. ராணுவ தளபதியை ‘குண்டர்’ என விமர்சித்தவர்கள் அவர்கள். தீவிரவாதிகள் மீது நம் ராணுவமும், விமானப்படையும் நடத்திய தாக்குதலில் சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது காங்கிரஸ்.
தற்போது அக்கட்சியின் தலைமையில் இருப்பவர்கள் கூட ஜாமீனில்தான் உள்ளார். பதவிக்காக நாட்டு நலனை அடமானம் வைத்தவர்கள் அவர்கள். இதையெல்லாம் நாங்கள் மாற்றியிருக்கிறோம். தற்போதைய ஆட்சியில் அனைத்தையும் விட அரசு அமைப்புகள் உயர்வானதாக மாறியிருக்கிறது. மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால், பழைய சம்பவங்களையே தொடர்வார்கள் என்பதை ஓட்டளிக்கும் முன் நன்றாக நினைத்து பார்த்து மக்கள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,Priyanka ,Congress ,government organizations , Priyanka, PM Modi, all government, Congress
× RELATED பிரதமர் மோடியின் நோக்கமே...