×

இன்ஜினியரிங் சிறப்பு துணைத்தேர்வில் முறைகேடு 37 தற்காலிக பணியாளர்கள் டிஸ்மிஸ்: அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

சென்னை: சிறப்பு துணைத்தேர்வு விடைத்தாளில் முறைகேடு செய்தது தொடர்பாக தமிழகம் முழுவதும் 37 தற்காலிக பணியாளர்களை பணிநீக்கம் செய்து அண்ணா பல்கலைகழகம் உத்தரவிட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தில் நிதி ஒதுக்கீடு, விடைத்தாள் மறுமதிப்பீடு, பதவி உயர்வு வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. விதிகளின்படி, வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வு வழங்கப்படாத சிலர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்  பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைகழக பதிவாளர், பல்கலைகழகத்தின் மண்டல அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:  2017ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களிலும், 2018ம் ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த சிறப்பு துணை தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

அதன்படி அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகங்களில் பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்களில் சிலர், மாணவர்களிடம் 15 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை பணம் பெற்றுக் கொண்டு, தேர்வு முடிந்த பின் விடைத்தாள்களை எடுத்து மாணவர்களிடம் கொடுத்துள்ளனர். அந்த விடைத்தாளில் மாணவர்கள் விடையை எழுதிய பின் அவை மொத்த விடைத்தாள் கட்டுகளில் வைக்கப்பட்டுள்ளது. இது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன்படி இந்த முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட 37 தற்காலிக ஊழியர்களின் பெயர்கள் இந்த சுற்றறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களை உடனடியாக பணிநீக்கம் செய்வதோடு, அது தொடர்பாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் அலுவலகத்திற்கு மார்ச் 28ம் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அண்ணா பல்கலைகழக சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:  டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்காலிக பணியாளர்கள். தற்காலிக ஊழியர்களுக்கு ஓரளவுக்கு தான் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும். அவர்களை வேலை வாங்கிய மண்டல ஒருங்கிணைப்பாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரை பணிநீக்கம் செய்யாதது ஏன். இவர்கள் அனைவரும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜி.வி.உமாவால் பணியில் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு, அவர்களுக்கு கீழ் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பிற முறைகேடுகளை மறைப்பதற்காக தற்காலிக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்கிறார்களா என்று கேள்வி எழுகிறது.  இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : faculty ,Anna University , Engineering Special Assistant, Staff Dismiss, Anna University
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!